செவ்வாய், 20 ஏப்ரல், 2021

கவலை தரும் 18% : தமிழகத்தின் இதர பகுதிகளை விட 2 மடங்கு கொரோனா சென்னையில்!

 சென்னையின் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் தொற்று பரவல் விகிதமானது, 9.7 சதவீதமாக இருக்கும் நிலையில், சென்னையில் பரவல் விகிதமானது தமிழகத்தை காட்டிலும் இரு மடங்காக 18 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 24000 பேருக்கு தொற்று பாதித்திருந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி, 25, 011 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த கொரோனா தொற்று பாதிப்பு தரவு ஆய்வாளர், விஜயானந்த் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறுகையில், ‘சென்னையில் தொற்றின் இரட்டிப்பு கால இடைவெளியானது எட்டு நாட்களாக இருந்து வருகிறது. தற்போதைய நிலை தொடர்ந்தால், ஒரு வாரத்தில் 50,000 தொற்றுகள் உறுதி செய்யபப்டும். தமிழ்நாடு முழுவதும் தொற்று இரட்டிப்பாகும் காலமானது ஒன்பது நாள்களாக உள்ளது. தொற்று பாதிப்பு இந்த விகிதத்திலே தொடர்ந்தால், அடுத்த ஆறு நாட்களில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையானது ஒரு லட்சத்தைத் தொடும்’, என்றார்.

தற்போது, சென்னை மாநகராட்சியில் கொரோனா சிகிச்சை மையங்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவீதத்துக்கும் மேலானோர் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், எதிர்வரும் வாரங்களில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கையானது, மிக அதிகமாக இருக்கும் போது, மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையானது கனிசமாக அதிகரிக்கக் கூடும், என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொற்று நோய் நிபுணர் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் கூறுகையில், கொரோனா சிகிச்சைக்கான செயல்முறைகளை அரசு மேம்படுத்தவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெறிமுறைகளையே இப்போது வரை பின்பற்றி வருகிறது. மருத்துவ நிபுணர்கள் விரைவான முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.

முன்பு, பெரும்பாலும் வயதானவர்களிடமே கொரோனா அறிகுறிகள் பரவலாக தென்பட்டது. தற்போது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்களாக இருக்கின்றனர். தொற்று பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவதால், அவர்களின் குடும்பத்தாரும் தொற்றுக்கு உள்ளாவது ஆபத்தான நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதால், அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த அனுமதிக்கக் கூடாது. தொடர்ந்து பேசிய அவர், படுக்கை வசதி பற்றாக்குறை கடந்த ஆண்டை விட மிகவும் மோசமாக உள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ள இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்’, என்றார்.

கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் சூழலில், ஆக்ஸிஜன் படுக்கை வசதியின் தற்போதைய நிலையையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என, தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் உதவி இயக்குநர் டாக்டர். பி. கணேஷ் குமார் தெரிவித்தார். ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருவோரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதன் மூலம், அதற்கான தேவைகளை முன்கூட்டியே திட்டமிட உதவலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக சென்னை மாநகாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படும் வேளையில், அவரோடு தொடர்பில் இருந்தவர்களில் குறைந்தபட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, தொற்று அதிகரித்திருந்த வேளையில், அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், தற்போது மாறிவிட்டது’ என்றனர்.

சென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் 12,600 படுக்கை வசதிகளை தற்போது வரை கொண்டுள்ளது. இதன் ண்ணிக்கையை 20,000 ஆக உயர்த்த மாநகராட்சி தயாராக உள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையும் பற்றாக்குறையானது தான் என எங்களுக்கு தெரியும் என, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-covid-corona-peak-youngsters-doctors-experts-talks-pandemic-situation-293767/