வெள்ளி, 16 ஜூலை, 2021

தடுப்பூசி பற்றாக்குறை: மாநில அரசுகள் மீது பழிபோடும் மத்திய அரசு

 மத்திய அரசு தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என அறிவித்த பிறகு ஜூன் மாத இறுதியிலிருந்து தடுப்பூசி போடப்படுவது குறைந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தடுப்பூசிகள் போதுமான அளவு கிடைப்பதாக புதன்கிழமை கூறியுள்ளது.

ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை என கூறியுள்ள நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தடுப்பூசி குறித்த தனது முதல் அறிக்கையில், ஜூலை மாதத்திற்கு 13.5 கோடி டோஸ் கிடைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தடுப்பூசி கிடைப்பது குறித்து மத்திய அரசு முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்னரும், தடுப்பூசி மையங்களில் அதிகப்படியான மக்கள் வரிசையில் நிற்பதை காண முடிகிறது. தடுப்பூசி பணிகளை முறையாகத் திட்டமிடாமல் செய்தற்கு யார் காரணம் யார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது என கூறியுள்ளார்.

மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து அரசு தடுப்பூசி மையங்களுக்கும், பயனாளிகளுக்கும் இலவசமாக வழங்கும் என ஜூன் 21ஆம் தேதி அறிவித்தது. ஜூன் 21 முதல் 30ஆம் தேதி வரை, நாட்டில் தினசரி 54.88 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டது. இருப்பினும், ஜூலை முதல் இரண்டு வாரங்களில் அந்த எண்ணிக்கை 37.63 லட்சம் என்ற அளவில் குறைந்தது.

மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டர் பக்கத்தில், “அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் 11.46 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டுள்ளது. இது 13.50 கோடி டோஸ்களாக ஜூலை மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

ஜூலை 1 ம் தேதி, சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி 32.92 கோடி டோஸ் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14 ஆம் தேதி இது 39.59 கோடியாக இருந்தது. அதாவது, ஜூலை 1 முதல் 14 வரை 6.67 கோடி டோஸ் தடுப்பூசி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தினசரி சராசரியாக 37.63 லட்சம் தடுப்பூசிகள் என்ற அளவில் இருந்தது. இந்த எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமான மருந்துகள், மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படாமல் இருப்பதைக் குறிக்கிறது.

புதன்கிழமை, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 15 மாநிலங்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தனியார் மையங்களில் மெதுவான வேகத்தில் தடுப்பூசி போடப்படுவதாக பிரச்சினையை எழுப்பினார். இது “கடுமையான கவலைக்கு ஒரு காரணம்” என்று கூறினார். அரசு மையங்களைப் போல் இல்லாமல், தனியார் நிறுவனங்கள் தடுப்பூசிகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன.

கூட்டத்தில் பங்கேற்ற 15 மாநிலங்கள் உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, தெலுங்கானா, அருணாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகும்.

தனியார் மையங்கள் தடுப்பூசி கொள்முதல் செய்ய வசதியாகவும், தினசரி அடிப்படையில் தடுப்பூசிகளின் நிலையை மறுஆய்வு செய்யவும், தடுப்பூசி போடுவதை உயர்த்தவும் மாநிலங்களுக்கு கூறப்பட்டது. சில மாநிலங்களில், தடுப்பூசிகள் போடப்பட்டதை விட அதிகமாக வாங்கப்பட்டுள்ளது என்றும், பயன்படுத்தப்படாத அளவுகள் விரைவாகப் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியது.

source https://tamil.indianexpress.com/india/centre-blames-states-for-dip-in-vaccination-323251/