வரதட்சணை தடை சட்டத்தை கடுமையாக்கும் வகையில் மாவட்டம் தோறும் வரதட்சணை வழக்குகளை கண்காணிக்கும் அதிகாரிகளை கேரள அரசு நியமனம் செய்துள்ளது.
கேரளாவில் அண்மைகாலமாக வரதட்சணை தொடர்பான புகார்கள், வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தல் செய்வது தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து வரதட்சணை தடை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கேரள அரசு முடிவு செய்தது.
கேரளாவில் அமலில் உள்ள வரதட்சணை தடை சட்டம் 1961ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதாகும். இந்த சட்டத்தின்படி வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்கு உரிய குற்றமாகும். திருமண பந்தத்தின் போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு சொத்தாகவோ அல்லது மதிப்பு மிக்க பாதுகாப்பு பத்திரமாக கொடுப்பதும் அல்லது கொடுப்பதாக ஒப்புக் கொள்வதும் சட்டப்படி தவறாகும்.
இந்த நிலையில் அண்மையில் இரண்டு நாட்களில் மூன்று பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொல்லத்தை சேர்ந்த விஷ்மாயா என்ற கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவி கடந்த ஜூன் 20ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். விஷ்மாயாவின் திருமணத்துக்கு அவரது கணவருக்கு டயோட்டோ யாரிஸ் கார், ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலம், 100 சவரன் தங்கம் ஆகியவற்றை பரிசாக கொடுத்ததாக சொல்கின்றனர். ஆனால், உதவி மோட்டார் வாகன ஆய்வாளராக இருக்கும் விஷ்மாயாவின் கணவர் தனது அந்தஸ்துக்கு ஏற்றபடி மனைவியின் வீட்டார் கார் வாங்கித் தரவில்லை என்று குற்றம் சாட்டியதாக தெரிகிறது. மனைவி விஷ்மாயாவிடம் இது குறித்து அடிக்கடி பேசி அவரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கணவர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. எனவே மனமுடைந்த விஷ்மாயா தற்கொலை செய்து கொண்டார்.
திருவனந்தபுரம் விழிஞ்சம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவரும் வரதட்சணை கொடுமை காரணமாக கடந்த ஜூன் 22ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவருக்கும் சுரேஷ் என்பவருக்கும் 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனாலும் தனக்கு மேலும் அதிக வரதட்சணை வேண்டும் என்று தொந்தரவு கொடுத்ததால் அர்சனா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மூன்றாவதாக ஆழப்புழாவில் சுசித்திரா என்பவர் ஜூன் 22ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். கடந்த மார்ச் மாதம் விஷ்ணு என்ற ராணுவ வீர ருடன் சுசித்திராவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் அவரது கணவர் உத்தரகாண்ட் சென்று விட்டார். இத்த நிலையில் வரதட்சணை கொடுமை காரணமாக சுசித்திரா தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.
இப்படி அடுத்தடுத்து இரண்டு நாட்களில் மூன்று பெண்கள் தற்கொலை செய்து கொண்டதால் கேரளா முழுவதும் வரதட்சணைக்கு எதிரான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. வரதட்சணை தடை சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து இப்போது வரதட்சணை தடை சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:
“ஏற்கனவே அமலில் உள்ள வரதட்சணை தடை சட்டத்தின் கீழ், வரதட்சணை தடை சட்டத்தை அமல்படுத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மண்டல அளவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் மட்டும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இப்போது வரதட்சணை தடை சட்டத்தை அமல்படுத்தும் அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அதிகாரிகள் , வரதட்சணை தடை சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளாக செயல்படுவார்கள். இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் துறை இயக்குநர் இப்போது வரதட்சணை தடுப்பு சட்டத்தின் தலைமை அலுவலராக இருப்பார். இப்போதைய காலகட்டத்தில் வரதட்சணை தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளதால், வரதட்சணை வழக்குகளில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரதட்சணை தடை சட்டத்தின் கீழ் முதல் கட்டமாக அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை தொடர்பான புகார்களை அளிக்கும் பெண்களுக்கு உதவி அளிப்பதற்காக ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் முன் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாவட்ட அளவில் வரதட்சணை தடுப்பு குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வதற்காக மாவட்ட அளவில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வழிகாட்டுதல் வாரியங்கள் அமைக்கப்படும்.
பாலினம் மற்றும் பெண்களுக்கான விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகளை கல்லூரிகள், தேசிய சேவை திட்டங்கள் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
வரதட்சணை கொடுமை காரணமாக ஏற்படும் மரணங்கள் கேரளாவில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஆளும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரதட்சணையை கண்டித்து அண்மையில் கேரள ஆளுநர் அரீப் முகமது கான் நாள் முழுவதும் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். வரதட்சணை வாங்க மாட்டோம் என்ற இயக்கத்தையும் கேரள மாநில போலீசார் தொடங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/kerala-amends-dowry-prohibition-rules.html