வியாழன், 15 ஜூலை, 2021

இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் கிடையாது – மத்திய அலுவல் மொழித்துறை

 


இந்தியாவிற்கு தேசிய மொழி என்ற ஒன்று கிடையாது என மத்திய அலுவல் மொழித்துறை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக தமிழ்நாட்டில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விக்கு இந்தியில் பதில் வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த பாண்டியராஜா என்னும் சமூக ஆர்வலர் இரண்டு மாதத்திற்கு முன்பு, ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்பாக ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, பல்வேறு வட மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே கோட்டங்கள் ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியில் பதில் அளித்துள்ளனர். அதைப்போல திருநெல்வேலியைச் சார்ந்த ஒருவருக்கு சென்னை விமான நிலையம் சம்பந்தமாக இந்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் கடந்த மாதம் சென்னை சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மருத்துவமனைகள் தொடர்பாக ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, இந்தியில் பதில் அளித்தது மட்டுமல்லாமல் தபால் அட்டையின் மீது இருந்த முகவரியில் கூட இந்தி திணிக்கப்பட்டு இருந்தது பல்வேறு அதிர்வலைகளை உண்டாக்கியது.

இதுமட்டும் அல்லாமல் பல்வேறு காலகட்டங்களில் தமிழக எம்பிக்களுக்கு மத்திய அரசு அதிகாரிகள் இந்தியில் பதில் அளித்து இருந்ததும், தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, மத்திய அரசு அலுவலகங்கள் மூலம் இந்தி திணிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சமூக ஆர்வலர் பாண்டியராஜா தேசிய மொழி என்று, ஏதாவது இருக்கிறதா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்த மொழியில் தகவல அளிக்க வேண்டும் உள்ளிட்ட சில கேள்விகளை மத்திய அலுவல் மொழித்துறையிடம் கேட்டிருந்தார்.

இந்த கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்த மத்திய அலுவல் மொழித்துறை, இந்தியாவிற்கு என தேசிய மொழி எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளது. மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால் எந்த மொழியில் பதிலளிக்க வேண்டும் என்பது தொடர்பாக மத்திய அலுவல் மொழித்துறை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. தகவல் தரும் அதிகாரி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்தால் அவருக்கு எந்த தண்டனையும் கிடையாது எனவும் அலுவல் மொழி விதிகள் 1976 தமிழ்நாட்டிற்கு பொருந்தாது எனவும் பதில் அளித்துள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்த பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இந்தி திணிக்கப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழக எம்பிக்கள் அனைவரும் வரும் 19ம் தேதி தொடங்க இருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்தி திணிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார். கோவின் இணைய தளத்தில் முக்கிய பிராந்திய மொழிகள் இணைக்கப்பட்டது போல் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கும் மாநில மொழிகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

source https://news7tamil.live/india-does-not-have-national-language.html