ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தேசத்துரோக சட்டத்தின்கீழ் வழக்குகளை பதிவு செய்ய அனுமதிக்கும் அரசியல் சாசன பிரிவு 124 ஏ வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனு, தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியர்களை அடக்குவதற்காக கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் இன்னும் தேவையா? என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பினார்.
மேலும், சுதந்திரத்தை பறிப்பதற்காக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்குகளில் மகாத்மா காந்தி, திலகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், தேவையில்லை என கருதிய பல சட்டங்களை திரும்பப்பெற்ற அரசு, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னரும் இந்த சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தேச துரோக சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள், மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இந்த சட்டத்தை ரத்து செய்யக்கூடாது எனவும், சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தால் போதுமானது எனவும் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க கோரி நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
source https://news7tamil.live/sedition-law-colonial-why-dont-you-drop-it-supreme-court-asks-centre.html