புதன், 14 ஜூலை, 2021

புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

14/07/2021   தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக புதுச்சேரி அரசின் முயற்சிகளை தமிழக அரசு கூர்ந்து கவனித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இடையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கன நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக மீண்டும் தடை செய்யப்பட்டது. இதனால மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் இது மாணவர்களுக்கு எந்த அளவிற்கு போதுமான திறனை வளர்க்கும் என்பது குறித்து பெரும் கேள்வி எழுந்துள்ளதால், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பெற்றோர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் பள்ளிகள் வரும் 16-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில்,  தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதில் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு பாண்டிச்சேரி அரசின் நடவடிக்கைளை தமிழக அரசு கவனித்து வருவதாக கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,  தமிழகத்தில், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்காக அண்டை மாநிலமான புதுச்சேரியின் முயற்சியையும், மாநிலத்தில் இதேபோன்ற முயற்சியைக் மேற்கொள்வதற்காக தமிழக அரசு கவனித்து வருவதாகவும், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் ஜூலை 16 முதல் மீண்டும் திறக்கப்படுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தால் நாங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க முடியும். அப்போதுதான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப  வசதியாக இருக்கும். அதற்கு சிறிது வாரங்கள் எடுக்கும் என்று கூறிய அவர், அரசுப் பள்ளிகளில் சேருவதற்கான கோரிக்கையின் பேரில், கடந்த வாரம் வரை, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3.40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநிலம் முழுவதும் அரசு  பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்

அரசுப்பள்ளியில் சேர்ந்த மாணவர்களை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு, அரசு பள்ளிகளில் சேருவது அதிகமாக உள்ளது. எனவே, உள்கட்டமைப்பு மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள பாடங்கள், குறிப்பாக, ஆங்கில பாடத்திட்டத்தை வழங்க அரசு பள்ளிகளில் பயிற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக பள்ளிகள் திறக்கப்படாத்து பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்ய நிர்பந்திப்பதாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது பல அரசு பள்ளிகள் 5-10% சேர்க்கை அதிகரித்துள்ளன. “வேலை வாய்ப்புகளில் தமிழ் வழி மாணவர்களுக்கு முன்னுரிமை என்பதால் அரசு ஊழியர்கள் கூட தங்கள் குழந்தைகளை அரசு நடத்தும் பள்ளிகளில் சேர்க்கச் செய்துள்ளது” என்று ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்காக 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட டி.என்.டி.இ.டி தேர்வில் உள்ள பின்னிணைப்புகள் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன, அதற்கான நிலைமையை முதலமைச்சருக்கு தெரிவிப்போம்” என்று  தெரிவித்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-when-school-reopen-in-tamilnadu-minister-anbil-magesh-answar-322944/