2 3 2022
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற பிரதிநிதிகள் பதவி ஏற்கும் விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், சிவகாசி நகராட்சியில் வெற்றிபெற்ற 11 அதிமுக கவுன்சிலர்களில் 9 பேர் திமுகவில் இணைந்தது, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில், கவுன்சிலர்கள் மட்டுமின்றி அதிமுக நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர்.
சிவகாசி, திருத்தங்கல் ஆகியவற்றை இணைத்து சிவகாசி மாநகராட்சி உருவாக்கப்பட்டது. சிவகாசியில் 24 வார்டுகளும், திருத்தங்கல்லில் 24 வார்டுகள் என மொத்தம் 48 வார்டுகள் உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டது. மேலும், அங்கு வரவிருக்கும் முதல் மேயருக்கான பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக 24, அதிமுக 11, காங்கிரஸ் 6 , பாஜக, விசிக, மதிமுக தலா ஒரு வார்டுகளிலும் 4 வார்டுகளில் சுயேட்சைகளும் வெற்றிபெற்றன
மேயர், துணை மேயரை தேர்வு செய்ய திமுக, அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பலத்த பெரும்பான்மையுடன் இருந்த போதிலும் 9 அதிமுக கவுன்சிலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
அதிமுக 1-வது வார்டு கவுன்சிலர் செல்வம், 2-வது வார்டு சசிக்குமார், 4-வது வார்டு அழகுமயில், 6-வது வார்டு நியா, 7-வது வார்டு சேதுராமன், 13-வது வார்டு மாரீஸ்வரி, 14-வது வார்டு சாந்தி, 17-வது வார்டு நிலானி, 21-வது வார்டு சந்தனமாரி ஆகியோர் இணைந்தனர்.
அதேபோல், திருத்தங்கல் முன்னாள் அதிமுக நகரச் செயலர் பொன்.சக்திவேல், முன்னாள் ஒன்றியச் செயலர் பலராமன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவிசெல்வம், ரமணா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர். தற்போது, அங்கு 2 கவுன்சிலர்கள் மட்டுமே அதிமுகவில் உள்ளனர்.
முன்னதாக, தேர்தலில் வாக்களித்த பின் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதன்முதலாக அறிவிக்கப்பட்ட சிவகாசியில் மேயர் மற்றும் துணை மேயர் பதவியை அதிமுக கைப்பற்றும். 48 வார்டுகளில் 33 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/nine-aiadmk-councillors-in-sivakasi-corporation-join-dmk-419297/