11 10 2022
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தமிழ் பெண் உள்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மா. இவர் தனது சகோதரி பழனியம்மாவுடன் கொச்சியில் வசித்துவந்துள்ளார். இந்த நிலையில், பத்மா செப்டம்பர் 26ஆம் தேதி மாயமானார்.
இது தொடர்பாக பத்மாவின் சகோதரி பழனியம்மா கொச்சி எல்லைக்குள்பட்ட கடவந்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதேபோல், எர்ணாக்குளத்தில் லாட்டரி சீட்டு விற்றுவந்த ரோஸ்லின் என்ற 49 வயது பெண்ணையும் ஜூன் 8ஆம் தேதி முதல் காணவில்லை. ரோஸ்லின் மகள் உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியையாக பணிபுரிந்துவருகிறார்.
இவர் மாயமான தனது தாயார் குறித்து காலடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனினும் மாயமான இந்த இரு பெண்கள் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இரண்டு பெண்களில் பத்மா நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற விவரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியான ராஷித் என்ற ஷபி என்பவரை பெரும்பாவூரில் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ஷபி, இரு பெண்களின் வறுமையை பயன்படுத்தி பத்தனம்திட்டாவில் உள்ள எலந்தூர் கிராமத்தைச் சேர்ந்த மந்திரவாதி பகவல் சிங் தம்பதியிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
நரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை
அங்கு இரண்டு பெண்களின் தலையை வெட்டி, கொடூரமாக துண்டு துண்டாக வெட்டி கொன்று நரபலி கொடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் தற்போது தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
இந்த வழக்கில் ஷபி ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுவிட்டார். மந்திரவாதி பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் பகவல் சிங், உள்ளூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி என்று கூறப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/two-women-killed-in-human-sacrifice-in-keralas-pathanamthitta-523989/