வெள்ளி, 28 அக்டோபர், 2022

பத்திரிகையாளர்களை குரங்கு என விமர்சனம் செய்வதா?தலைவர்கள் கண்டனம்

 

27 10 2022

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை எல்லாரும் மரத்து மேல குரங்கு தாவுகிற மாதிரி எல்லோரும் சுற்றி சுற்றி வருகிறீர்கள் என்று அவமரியாதையாக சாடியதற்கு சென்னை பிரஸ் கிளப் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அண்ணமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியதற்கு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க. எம்.பி செந்தில்குமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கருத்து கேட்டபோது, அண்ணாமலை அவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “என்ன மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி எல்லாம் சுத்தி சுத்தி வரீங்க. என்ன இது… நான் சாப்பிட போகும்போது என்ன சொல்லிட்டு போனேன். மரியாதையாக நின்று நீங்க எல்லாம் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு போனேன். ஊர்ல நாய், பேய், சாராயம் விக்கிறவன் சொல்றதுக்கு எல்லாம் பதில் கேப்ப அதுக்கெல்லாம் பதில் சொல்லணுமா…நவுருங்க” என்று கடுமையாகப் பேசிவிட்டு புறப்பட்டார்.

இந்நிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை குரங்குகள் என அவமரியாதையாகப் பேசியதற்கு சென்னை பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தீபாவளி மதுவிற்பனை எண்ணிக்கை குறித்து பேசி விட்டு, இது தொடர்பாக என் மீது வேண்டுமானால் வழக்கு போடுங்கள் , பத்திரிகையாளர்களை மிரட்டாதீர்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறிவுரை கூறியிருந்தார்.
ஆனால், இரண்டு நாட்களுக்குள் இன்று (27-10-2022) வியாழக்கிழமை கடலூரில் செய்தியாளர்கள் கேள்விகேட்க முயன்றபோது ஆத்திரமடைந்து மரத்து மேல குரங்கு போல தாவித்தாவி சுற்றி சுற்றி வருகிறீர்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக விமர்சனம் செய்திருக்கிறார்.

அமைச்சர் செந்திபாலாஜி கூறிய கருத்துக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு நாய், பேய் சாராயவியாபாரிக்கு எல்லாம் பதில் கூறமுடியாது எனவும் ஆவேசப்பட்டிருக்கிறார். அவரது அரசியல் எதிர்வினைகள் குறித்து நாம் விமர்சிக்க வேண்டியதில்லை. ஆனால் அண்ணாமலை செய்தியாளர்கள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தி குரங்குகள் என்று தரக்குறைவான விமர்சனம் செய்திருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
உண்மையான பத்திரிகையாளர்கள் அறிவாலயத்திற்கும் அடிமைகளும் இல்லை அவர்கள் கமலாலயக் கூலிகளும் இல்லை. கட்சி, ஆட்சி என பத்திரிகையாளர்களை அடையாளப்படுத்தி இழிவுப்படுத்தும் போக்கை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளால் அவமதிக்கப்படும் மிரட்டப்படும் போக்கு அதிகரித்து வருவது வேதனைக்கும் கண்டனங்களுக்கும் உரியது. பொது வெளியில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டியதை மீண்டும் வலியிறுத்துவதோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.அதுவே ஆரோக்கிய அரசியலாக அமையும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

மேலும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை குரங்குகள் என அவமரியாதையாகப் பேசியதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு பா.ஜக. தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் இருக்கும் பத்திரிகையாளர்களை ஒருமையில் அழைப்பது, குரங்கு என்று சொல்வதெல்லாம் அநாகரிகத்தின் உச்சம். இவர்களுக்கு நாவடக்கம் தேவை. தலைமையே இப்படி பேசினால், தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்?

சில வாரங்களுக்கு முன் செய்தி சேகரிக்க சென்ற பத்தரிகையாளர்களை தகாத வார்த்தைகளில் பேசி, அவர்களை அடிப்பதற்கு துணிந்தவர்கள் தான் இந்த பா.ஜ.க.வினர்.

நாகரீகம் தவழும் தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் அடிச்சுவடு தெரியாதவர்கள் கட்சியின் தலைவராக ஆக்கினால் இப்படித்தான் அநாகரிகமாக பேசுவார்கள்.

இவற்றையெல்லாம் தமிழக மக்கள் கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் எதை எப்படி செய்யவேண்டுமென்று.” என்று தெரிவித்துள்ளார்.

ஊடகத்தினரை இழிவுபடுத்தும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் போக்கு அநாகரீகமானது என தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் பயன்பாட்டை சிதைத்து சீரழிக்கும் வேலையை பாஜக மேற்கொண்டு வருகிறது என டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களென பெருமைப்படுத்தினார், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள். பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே.” என்று குறிப்பிட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/annamalai-criticise-journalist-as-monkey-leaders-and-chennai-press-club-condemns-532201/