வியாழன், 20 அக்டோபர், 2022

மாணவிகளிடையே சாதிய பாகுபாடு; கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

 

19 10 2022

நாமக்கல் திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளிடையே சாதிய பாகுபாடு காட்டிய கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மிகவும் பழமையான இந்த கல்லூரியில் பல்வேறு வகையான பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சித் துறையில் பட்ட மேற்படிப்பு பிரிவுகள் உள்ளன. இங்கு 4,000 மாணவிகள் இந்த கல்லூரியில் படித்து வருகின்றனர். இதனால் இக்கல்லூரியில் சிப்ட் முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது.

 இந்த கல்லூரியின் முதல்வராக பால் கிரேஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்பு ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி முதல்வராக பணியாற்றினார். அப்போது, அவர் நிர்வாக காரணங்களுக்காக, திண்டிவனம் அரசு கலைக்கல்லூரிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

அங்கு கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்தை அகற்றினார் என்பதற்காக, விழுப்புரம் மாவட்ட எஸ்.சி எஸ்டி அமைப்பினர் அவர் மீது ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதையொட்டி அவருக்கு சார்ஜ் மெமோ வழங்கப்பட்டு, தற்போது வரை அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னர் அங்கிருந்து, நிர்வாக காரணங்களுக்காக அவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரிக்கு மாறுதல் செய்யப்பட்டார். இந்த கல்லூரியில் அவர் சட்ட விதிகளுக்குப் புறம்பாக, சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காக்காமல், மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுடன் சுமூகமாக செயல்படவில்லை என ஏற்கனவே பல்வேறு தரப்பிலும் இருந்து புகார்கள் எழுந்தது.

 மேலும், மாணவிகளிடையே சாதிய பாகுபாடு காட்டுவதாகவும், மாணவியர் சேர்க்கையின்போதும், மாணவிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்துவதிலும், மாவட்ட நிர்வாகத்திற்கு முறையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பல்வேறு புகர்கள் எழுந்துள்ள நிலையில், கடமையை சரியாகச் செய்யவில்லை எனக்கூறி கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் மறு உத்தரவு வரும் வரை, பணியிலிருந்து உடனடியாக சஸ்பெண்ட் (பணியிடை நீக்கம்) செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்து உள்ளார். மேலும் கல்லூரி முதல்வர் பால் கிரேஸ், அவரது சஸ்பெண்ட் சம்பந்தமான விசாரணை முடியும் வரை, அவர் நாமக்கல்லில் இருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/caste-discrimination-among-female-students-college-principal-suspended.html