வியாழன், 20 அக்டோபர், 2022

இந்தியும், இந்துவும் தான் இந்தியாவா? : ப. சிதம்பரம்

 19 10 2022

ப. சிதம்பரம்</strong>

கடந்த அக்டோபர் 11, 2022 அன்று, மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலில் 900 மீட்டர் நடை பாதையை திறந்து வைப்பதற்காக திரு நரேந்திர மோடி உஜ்ஜயினுக்கு விஜயம் செய்தார். மோடி ஒரு பக்தியுள்ள இந்துவாக இருக்கிறார் பெரும்பாலான இந்தியர்கள் பக்தியுள்ள இந்துக்கள் தான். இந்துக்கள் அல்லாத மற்ற பெரும்பாலானோர் அவரவர் மதங்களில் பக்தி கொண்டவர்கள். அவர் மஹாகாலேஸ்வரர் கோவிலுக்குச் சென்றபோது, திரு மோடி பிரார்த்தனை செய்தார். சடங்குகளிலும் பங்கேற்றார். மோடி செய்த பிரார்த்தனைகள் ஒவ்வொரு நிமிடமும் அனைத்து சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

அவருக்கு கருவறையில் பொன்னிற அங்கவஸ்திரம் மற்றும் குங்குமப் பொட்டு அணிவிக்கப்பட்டது. அவர் நெற்றியில் சந்தனப் பொட்டு, பெரிய திலகம் அணிந்திருந்தார். அவர் கூட்டத்தில் பேசும்போது நன்றாக தயார் செய்யப் பட்ட உரையை நிகழ்த்தினார். நாடு முழுவதும் அமைந்துள்ள பழங்கால நகரங்களையும் அவற்றின் பெரிய கோவில்களையும் நினைவு கூர்ந்தார். சமஸ்கிருத நூல்களிலிருந்து மேற்கோள் காட்டினார்.

சிவபக்தியின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார். அவர் தனது வரிகளை மனப்பாடம் செய்தாரா அல்லது அவருக்கு முன் அவர் மட்டுமே பார்க்கும் படியான ஒரு டெலிபிராம்ப்டர் இருந்ததா எனத் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அது ஒரு நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்ச்சி தான் அது.

பிரதமர் நிகழ்த்திய உரை ஒரு இந்து ஆன்மீகவாதியின் சொற்பொழிவு போல அமைந்திருந்தது. அவர் பேசிய ஒவ்வொரு வாக்கியத்தையும் கூட்டம் ஆமோதித்து ஆரவாரம் செய்தது. இந்தியா இப்போது ஆன்மீக பயணத்தில் இருப்பதாகவும், “இந்தியாவின் ஆன்மீக பெருமையை நாங்கள் மீட்டெடுக்கிறோம்” என்றும் திரு மோடி கூறினார். அவர் தனது உரையை ‘ஜெய் ஜெய் மஹாகால்’ கோஷத்தை பல முறை உச்சரித்து முடித்தார். பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மீண்டும் கோஷமிட்டனர். இந்த சொற்பொழிவில் செய்தி தெளிவாக இருந்தது. திரு மோடியின் வரலாற்று பக்கங்களில் உள்ள இந்தியா என்றால் இந்து இந்தியா. மோடியின் கனவும் அதுவே தான்.

மோடி பேசியதெல்லாம் சரி தான். ஆனால் இதில் முரண்படுவது என்ன என்றால் நரேந்திர மோடி ஒரு தனிப்பட்ட நபர் அல்ல, அவர் இந்தியாவின் மாண்புமிகு பிரதமர். இந்திய நாடு இந்துக்கள் (79.8 சதவீதம்), முஸ்லிம்கள் (14.2), கிறிஸ்தவர்கள் (2.3), சீக்கியர்கள் (2.3) 1.7) மற்றும் பிறர் (2.0) என பல்வேறு சமூக மக்களை கொண்ட நாடு. மேலும் அவர் இந்திய அரசியலமைப்பின் மூலம் இந்திய மக்கள் அனைவருக்காகவும் செயல்படவும் பேசவும் கடமைப்பட்டுள்ளார். அதனால்தான் அரசியலமைப்பு ‘சமத்துவத்தை’ வலியுறுத்தியது நமது அரசியலமைப்பு சட்டத்தில் மதசார்பின்மை என்ற வார்த்தைக்கு அழுத்தம் தரப்பட்டு குடியரசை உருவாக்கிய ஆவணத்திலேலேயே மதசார்பின்மை உள்ளடக்கமாக இருக்கிறது.

மொழிகள் குழு பரிந்துரைகள் மற்றும் இந்தி திணிப்பு

உஜ்ஜயினியில் பிரதமர், இந்து ஆலய விழாவில் கலந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் மசூதி அல்லது தேவாலயத்தின் கும்பாபிஷேகத்திலும் பிரதமரை பார்க்க விரும்புகிறேன். இந்துக்களின் ஆன்மிகப் பயணம் குறித்து பிரதமர் உருக்கமாக பேசியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்து மதத்தினரின் ஆன்மீக பயணத்தையும் பிரதமர் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். பிரதமர் தனது சொற்பொழிவில், இந்து மத நூல்களில் இருந்து மேற்கோள் காட்டியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் சில சமயங்களில், பைபிளில் இருந்து ஒரு பரபரப்பான பகுதியையோ அல்லது குரானில் இருந்து ஒரு புனிதமான வசனத்தையோ அல்லது குரு கிரந்த் சாஹிப்பில் இருந்து ஒரு ஆத்மார்த்தமான பாடலையோ பிரதமர் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

மோதலை தூண்டுதல்

பிரதமர் இந்து மத நிகழ்ச்சியை கொண்டாடும் போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைதியாக இந்தி மொழியை திணிக்கும் ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தார். ஆட்சிமொழிக் குழுவுக்கு உள்துறை அமைச்சர் தான் அதிகாரப்பூர்வ தலைவர். அதன் 11வது அறிக்கை செப்டம்பர் 9, 2022 அன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது மற்றும் அதன் உள்ளடக்கங்கள் பற்றிய கதையை The Print என்ற செய்தி நிறுவனம் வெளிப்படுத்தும் என்று யாருக்கும் தெரியாது. தற்போதைய பரிந்துரைகள் இந்தி பேசாத இந்திய மாநிலங்களில் நிச்சயமாக அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

தி பிரிண்ட் அறிக்கையின்படி முக்கிய பரிந்துரைகளைப் பாருங்கள்

கேந்திரிய வித்யாலங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் இந்தி கட்டாயப் பயிற்று மொழியாக இருக்கும்.

கேள்வி: இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள கே.வி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இந்தி பயிற்றுவிக்கும் ஊடகமாக இருக்குமா? இந்தி மட்டுமே பயிற்றுவிக்கும் ஊடகமாக இருக்குமா அல்லது மாற்று பயிற்று மொழியாக இருக்குமா?
அரசு வேலைகளுக்கு ஆட்சேர்ப்புக்கான தேர்வு மொழியாக ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி பயன் படுத்தப் படும்.

கேள்வி: இந்தி தெரியாதவர்கள் அரசுப் பணிக்கான தேர்வு எழுத தடை விதிக்கப்படுமா?
இந்தி மொழியில் அறிக்கைகளையும் ஆவணங்களையும் தயாரிக்காத அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும்.

கேள்வி: பெங்காலி அல்லது ஒடியா அல்லது தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட ஒரு அதிகாரி, இந்தி கற்கவும், இந்தியில் தனது பணியைச் செய்யவும் கட்டாயப்படுத்தப் படுவாரா ?
எந்தெந்த துறைகளில் எல்லாம் அவசியமோ அங்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப் படும். காலப் போக்கில் படிப்படியாக இந்தி பயன்படுத்தப் படும்.

கேள்வி: மாணவர் எந்த மொழியைப் படிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றோருக்கும் மாணவருக்கும் இனி இல்லையா?
அரசாங்கத்தில் பணிபுரிய இந்தி மொழி அறிவு உறுதிப்படுத்தப் படும்.

கேள்வி: இந்தி பேசாத ஒருவருக்கு இந்தி தெரியாது என்பதற்காக அரசு வேலை மறுக்கப்படுமா?
அரசின் விளம்பர பட்ஜெட்டில் 50 சதவீதம் இந்தி விளம்பரங்களுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும்.

கேள்வி: மீதமுள்ள 50 சதவீதத்தை மற்ற எல்லா மொழிகளிலும் (ஆங்கிலம் உட்பட) விளம்பரங்களுக்கு ஒதுக்கினால், இந்தி அல்லாத ஊடகங்கள் நலிவடைந்து விடாதா?
இந்தியைப் பரப்புவது அனைத்து மாநில அரசுகளின் அரசியலமைப்புக் கடமையாக ஆக்கப்பட பாயும்.

கேள்வி: ஹிந்தியைப் பிரச்சாரம் செய்ய மறுக்கும் மாநில அரசு பதவி நீக்கம் செய்யப்படுமா?

நான் ஒரு அசாமியனாகவோ, அல்லது மலையாளியாகவோ இருந்தால் நான் அரைகுறை குடிமகனாக உணர்வேன் ஒரு முஸ்லிமாகவோ அல்லது கிறிஸ்தவனாகவோ இருந்தால், நான் குடியுரிமை இல்லாதவன் என்றே உணர்வேன்.

தமிழில் : த. வளவன்


source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-will-hindi-and-hindu-own-india/