29 10 2022
பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் இருந்து இளைஞர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்கும் நிலையை மேற்கொள்கின்றனர். இதில் படித்தவர்கள் தங்கள் படிப்புக்கேற்ற வேலையையும், படிக்காதவர்கள் தங்களுக்கு தெரிந்த வேலைகளையே வெளிநாட்டில் செய்வதற்காக செல்கின்றனர்.
இதில் படித்தவர்கள் தங்களுக்கு பிடித்தமான வேலையை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஏற்கனவே வெளிநாட்டில் வேலை பார்க்கும் தன்னுடன் படித்த நண்பர்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்கின்றனர். அதே சமயம் 3 மாதங்கள் சுற்றுலா விசா வாங்கிக்கொண்டு வெளிநாடு போய் தங்களது வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.
ஆனால் படிக்காதவர்கள் தங்களது வெளிநாட்டு வேலைக்காக ஏஜெண்டுகளை நம்பியே வருகின்றனர். இதில் ஒரு சிலருக்கு நல்ல வேலை அமைந்தாலும் பலரும் வெளிநாடு அழைத்துச்செல்லப்பட்டு ஏமாற்றப்படுகிறார். இங்கு ஒரு வேலைக்காக பணம் கட்டி விசா பெற்றுக்கொண்டு வெளிநாடு சென்றவுடன் அங்கு வேறு வேலையும், சம்பளம் குறைவாகவோ, சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் ஏஜெண்ட் மூலமாக ஏஜெண்ட்கள் மூலமாக குவைத் சென்ற 35 தமிழர்கள் அங்கு வேலை இல்லாமல் உணவிற்காக கஷ்டப்படும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் நாடு திரும்புவதற்கு கூட அவர்களிடம் பணம் இல்லாமல் பரிதவிப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது.
இந்த செய்தியை பார்த்த மறுநிமிடமே அவர்களை சந்தித்து அவர்களுக்கு உணவு கொடுத்து 19-பேரை இந்தியாவுக்கு திரும்பு உதவி செய்துள்ளது வெளிநாடு வாழ் தமிழர்கள நல அறக்கட்டளை நலச்சங்கம். இது தொடர்பாக இந்த சஙகத்தின் தலைவர் உஸ்மான் கான் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம்.
வெளிநாடு வாழ் தமிழர்கள நல அறக்கட்டளை நலச்சங்கம் தொடங்கிய தருணம் :
இந்தியாவில் இருந்து குறிப்பாக தமழகத்தில் இருந்து ஏறத்தாழ 120 நாடுகளுக்கு கல்விக்காகவும், பிழைப்புக்காக வேலைக்காவும் செல்கின்றனர். படித்தவர்கள் தங்கள படிப்பு சார்ந்த வேலைக்காக செல்கின்றனர். அதே சமயம் வாழ்வாதாரம் இழந்தவர்கள் குறிப்பாக விவசாய தொழில் நலிந்ததால் பல விவசாயிகள் வெளிநாடுகளுக்கு கூலி வேலைகளுக்காக செல்கின்றனர்.
இங்கிருந்து செல்பவர்கள் போகும்போதும் அங்கு வேலை செய்து சம்பளம் வாங்கும்போதும் எந்த பிரச்சினையும் இல்லை. அதே சமயம் அங்கு அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள். சிலர் தொழிலாளர்கள் விசாவில் செல்கின்றனர். இவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் உழைக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. முக்கிய காரணம் இவர்கள் யாரும் முறையான விசாவில் செல்வதில்லை.
இங்கிருந்து பெரும் எதிர்பார்ப்போடு வெளிநாடு வேலைக்கு செல்பவர்களுக்கு அங்கு 12, 14 சில முறை ஒரு நாளைக்கு 16 மணி நேரம்கூட உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் அவர்களால் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. மற்றொன்று உணவு. நமது நாட்டு உணவுக்கு வெளிநாட்டு உணவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
அடுத்து சீதோஷண நிலை மற்றும் மொழி பிரச்சினை. படித்தவர்களாக இருந்தால் ஆங்கிலம் இந்தி மொழியை பேசிக்கொள்வார்கள். ஆனால் பாமர மக்கள் செல்லும்போது அங்கு மொழி தெரியாமல் பெரிய சவாலை எதிர்கொள்கிறனர். இந்த மாதிரியான பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வர்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம் சொல்வது, என்று தெரியவில்லை. இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு கல்வி அறிவு இல்லை.
இந்த மாதிரியான துன்பங்களை அனுபவிப்பவர்களை மீட்டெடுக்க கேரளா அரசு பல அமைப்புகளை கட்டமைத்துள்ளது. இங்கு பல என்.ஜி.ஒ. இது மாதிரியான பணிகளை ஆக்கப்பூர்வமாக செய்கிறார்கள். டெல்லி வரை அவர்களின் அலுவலகங்கள் இருக்கிறது. ஆனால் தமிழர்கள் பாதிக்கப்படும்போது இவர்களுக்கு உதவ உருப்படியாக எந்த அமைப்பும் இல்லை. இதை சரி செய்யும் நோக்கில் எங்களது தோழர்கள் குவைத் சவுதி உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் கேரளா அமைப்புகளுடன் இணைந்து செய்துகொண்டிருந்தார்கள்.
அப்போதுதான் தமிழர்களுக்காக நாம் ஏன் இப்படி ஒரு அமைப்பை கட்டமைக்க கூடாது என்று யோசித்து தொடங்கப்பட்டதுதான் இந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கம். இதை தமிழகத்தில் பதிவு செய்யும்போது அறக்கட்டளையாக பதிவு செய்து செயல்படுத்தி வருகிறோம். நலச்சங்கம் 7 வருடங்களாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் இயங்கி வருகிறது.
இந்த அறக்கட்டளை தொடங்கியபோது சந்தித்த சவால்கள் என்ன?
நிறைய இருக்கிறது. வெளிநாட்டு வேலையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் வெளிநாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க வேண்டிய நிலை உள்ளது. அதே போல் தமிழக அரசில் 2021 வரை வெளிநாடு வாழ் மக்களுக்காக எந்த துறையும் கிடையாது. அரசாங்கமும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
நாங்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தால் அதை அவர்கள் மேலிடத்திற்கு அனுப்புவார்கள் அவர்கள் தூரகத்திற்கு அனுப்புவார்கள். தூதரகத்தில் இருந்து என்ன பதில் வருகிறது என்பது தெரியாது. இதற்காக ஒரு முறையாக கட்டமைப்பு இல்லாமல் இருந்ததே ஒரு பெரிய சவாலாக இருந்தது. அதேபோல் குவைத, சவுதி, துபாய் என ஒவ்வொரு நாடுகளுக்கு ஒவ்வொரு சட்டம் இருக்கிறது. இந்த சட்டங்களை புரிந்துகொள்ள மிகவும் சிரமமாக இருக்கும். இதனால் ஒரே சீரான முறையில் செயல்பட முடியாத நிலை உள்ளது.
ஒவ்வொரு நாட்டு சட்டங்களை தெரிந்துகொண்டு உள்வாங்கி அதற்கு ஏற்றார்போல்தான் நாம் நடந்துகொள்ள வேண்டும். இதற்காக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எங்களது நிர்வாகிகளுக்கு அதற்கேற்ற பயிற்சியை கொடுத்து அவர்களை தயார் படுத்துவதே தொடக்கத்தில் பெரிய சவாலாக இருந்தது.
வெளிநாடுகளில் பிரச்சினை மற்றும் கஷ்டத்தில் உள்ள தமிழர்களை எவ்வாறு கண்டுபிடிக்கிறீர்கள்?
இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தங்கள் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும்பொது ஆடியோ அல்லது வீடியோ மூலம் கோரிக்கை வைக்கிறார்கள். நாங்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பார்க்கும்போது எங்ளுக்கு தெரிந்து அந்த நாட்டில் உள்ள எங்களது நிர்வாகிகளை தொடர்புகொண்டு பேசுகிறோம். சிலர் நண்பர்கள் மூலமாக எங்களது நிர்வாகிகள் நம்பர் வாங்கி நேரடியாக எங்களை தொடர்புகொள்கிறார்கள். அதேபோல் வெளிநாடுகளில் பிரச்சினைகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர் எங்களை தொடர்புகொள்கிறார்கள். இப்போது இணையதளம் மூலமாக எங்களை தொடபுகொள்வதே அதிகமாக உள்ளது.
இங்கிருந்து வெளிநாடு செல்லும் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள் என்ன? (குறிப்பாக ஏஜெண்ட்)
முதலில் தங்களுக்கு விசா வழங்கும் ஏஜெண்ட் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவரா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இதில்தான் நாம் முதலில் தவறு செய்கிறோம். முதலில இதை தெரிந்துகொண்டு அதன்பிறகு எந்த நாட்டுக்கு வேலைக்கு செல்கிறாரே அந்த நாட்டின் சட்டதிட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் கொடுக்கும் பணம் சரிதானா என்பது தெரியும்.
தொழிலாளர் சட்டங்களை பற்றி தெரிந்துகொண்டால் தான் விசாவுக்கு எவ்வளவு பணம் வாங்குகிறார்கள் என்பது தெரியும். இதில் எதையும் நீங்கள் புதுசா தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இலலை. இதன் அனைத்து தகவல்களும் இணையத்தில் உள்ளது. படிப்பறிவு இல்லை என்றாலும், இன்டர்நெட சென்டரில் சென்று சொன்னால் அவர்களே அனைத்தையம் சொல்லிவிடுவார்கள்.
அதேபோல் அரசு தரப்பில் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியும் உள்ளது. அங்கு சென்று தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் விசா வழங்கும் டிராவல் ஏஜென்சி வேலைக்கு செல்பவருடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். இந்த ஒப்பந்தம் போடும் அந்த டிராவல் ஏஜென்சி முறையாக அரசாங்கத்திடம் பதிவு செய்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
இதில் பதிவு செய்யப்பட்ட டிராவல் ஏஜென்சி இல்லாமல் அவர்களுடன் தொடர்பில் உள்ள ஏஜென்சியிடம் ஒப்பந்தம் போடுவார்கள். இதை தொடர்ந்து வெளிநாடு சென்றபின் ஏதாவது பிரச்சினை நடந்தால் அரசு பதிவு செய்யப்பட்ட டிராவல் ஏஜென்சி தங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று சொல்விடுவார்கள் அதையும் கவனமாக பார்க்க வேண்டும்.
நாம் வேலைக்கு செல்லும் நாட்டின் சட்டதிட்டங்கள், நமக்கு வந்திருக்கும் விசா சட்டப்பூர்வமானதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நிறுவனம் அரசாங்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இதை கவனித்துக்கொண்டால் ஓரளவு பிரச்சினை வர வாய்ப்பில்லை. அப்படியே பிரச்சினை வந்தாலும் தீர்ப்பது எளிதாக இருக்கும். வெளிநாடு சென்றவுடன் முதல் வேலையாக அங்குள்ள இந்திய தூதரகத்தில் தகவல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினை வந்தால் அவர்கள் நம்மை தொடர்புகொள்ள வசதியாக இருக்கும்.
குவைத்தில் பரிதவித்த தமிழர்களை நாடு திரும்ப என்ன முயற்சி மேற்கொண்டீர்கள்?
தொலைக்காட்சியில் வந்த செய்தியை பார்த்துதான் எனக்கு தகவல் வந்தது. உடனே எங்களது குவைத் நிர்வாகிகளை தொடர்புகொண்டு இந்த வீடியோ பதிவுகளை அனுப்பி வைத்தோம். அங்குள்ள ஒரு நிரூபர் மூலமாக தமிழர் ஒருவரின் நம்பரை வாங்கினோம். அவர்கள் அனைவரும் குவைத் சிட்டியில் இருந்து 110 கி.மீ தொலைவில் ஒரு பாலைவனத்தில் மொத்தமாக இருந்தார்கள்.
அவர்களுடன் பேசியபோது எங்களை இங்கு விட்டு சென்றார்கள். ஆனால் இங்குள்ள ஓனர் நான் இந்த வேலைக்கு ஆட்கள் கேட்கவில்லை என்றும், வேறு வேலைக்கு ஆட்களை கேட்டேன். என்னால் இவ்வளவு தான் சம்பளம் கொடுக்க முடியும் என்றும் விருப்பம் இருந்தால் இருங்கள் இல்லை என்றால் கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டதாக கூறினார்கள்.
நாங்கள் இப்போது ஒரு செட் மாதிரியான இடத்தில் உட்கார்ந்திருக்கிறோம். சாப்பிட கூட ஒன்றும் இல்லை என்று சொன்னவுடன் அவர்களுக்கு 15 நாட்களுக்கு தேவையாக உணவு பொருட்களை அனுப்பி வைத்தோம். மறுநாள் இந்திய தூதரகத்தன் அபபாயின்மெண்ட் வாங்கி அவர்களை தூதரகத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுக்க வைத்தோம். உடனடியாக தூதரகம் அங்கிருந்து ஏஜெணட் பிரதிநிதிக்கு சம்மன் அனுப்பினார்கள். அவர் பிரச்சினை பெரிய அளவில் சென்றுவிடக்கூடாது என்று கூறி அவர்கள் அனைவருக்கு டிக்கெட் எடுத்து கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இது வழக்கமாக நடக்கும் நடைமுறை இல்லை. ஏஜெண்ட் எனக்கு தெரியாது என்று தப்பித்துக்கொள்ளத்தான் பார்ப்பார்கள். ஆனால் இந்த முறை தூதரகம் துரிதமாக செயல்பட்டதால் அந்த ஏஜெண்ட் உடனடியாக டிக்கெட் எடுத்து கொடுத்துள்ளார். இதில் குவைத் சென்ற ஒவ்வொருவரிடமும் 1.5 லட்சம் வாங்கியிரக்கிறார்கள். அங்கு சம்பளம் 30 ஆயிரம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஓனர் 13 ஆயிரம் தான் தருவதாக கூறியுள்ளார்.
13 ஆயிரத்தில் சாப்பிட்டு கடனை அடைப்பது சாத்தியமில்லை என்பதால் அவர்கள் திரும்பி ஊருக்கு வந்துவிடுவதாக கூறியுள்ளனர். இதனால் ஒவ்வொருவருக்கும் 1.5 லட்சத்தை ஏஜெண்ட் திரும்ப கொடுக்க வேண்டும். இப்போது அரசாங்கத்தின் கோபத்தை தனிப்பதற்காக அனைவருக்கும் ஏஜெண்ட் டிக்கெட் எடுத்து கொடுத்துவிட்டார். இதை தொடர்ந்து 19 பேர் கேரளா மாநிலம் கோழிக்கூடு வரை வந்துவிட்டார்கள். இங்கிருந்து தமிழகம் திரும்ப அவர்களிடம் பணம் இல்லை என்பதால் நமது சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.
அதன்பிறகு தமிழ அரசு 2 வேன்களை ஏற்பாடு செய்தது. அதன்பிறகு கோழிக்கூட்டில் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்துகொண்டுத்து தமிழகம் திரும்ப வைத்தோம். அதன்பிறகு தமிழகம் வந்து சொந்த ஊர் திரும்ப பணமில்லாத நிலையில், அவர்களிடம் போன் இல்லாததால் நம்மை தொடர்கொள்ளவில்லை. அதன்பிறகு அந்த ஊர்க்காரர்கள் யாரோ உதவி செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் பரிதவிக்கும் மக்களுக்காக இந்திய தூதரகத்தின் சப்போர்ட் எந்த அளவுக்கு உள்ளது?
ஒவ்வொரு நாட்டை பொறுத்து இருக்கிறது. குவைத்தில் நன்றாக இருக்கிறது. அதே சமயம் நமது அனுகுமுறையை பொருத்தது. குவைத்தில் சிறப்பாக உள்ளது. பிரச்சினை என்று யார் சொன்னாலும் துரிதமாக செயல்படுகிறார்கள். ஓமன் மாதிரியான நாடுகளில் ரொம்ப கவலைக்கிடமாக உள்ளது. மனிதாபிமானம் இல்லாமல் இருக்கிறது என்று சொல்லலாம். சவுதி அரேபியா பரவாயில்லை. துபாயில் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒருசில நாடுகளில் பாராமுகமாகத்தான் இருக்கிறார்கள். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் பாதிக்கப்பட்டாலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அறிவுத்த வேண்டும்.
புதிதாக வெளிநாடு செல்பவர்களுக்கான அறிவுரை என்ன?
தமிழக அரசு சார்பில் மேன்பவர் கார்ப்ரேஷன் ஒன்று இருக்கிறது. அதன் மூலமாக வெளிநாடு செல்ல விசா உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுக்கிறார்கள். இது முறையாக இருக்கிறது. அவர்கள் சென்று வரும்வரை தமிழக அரசின் நேரடி மேற்பார்வையில் இருப்பதால் ஏமாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதேபோல் ஏஜெண்டுகளை முறையாக தேர்வு செய்ய வேண்டும். தனது ஏஜெண்ட் சரியானவரை என்பதை கண்டறிய தமிழக அரசே ஹெல்பட் லைன் வைத்திருக்கிறார்கள்.
தமிழக அரசு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தொடங்கியதில் இருந்து சிறப்பாக செயல்படுகிறது. அதிகாரிகளும் அமைச்சர்களை எப்போது தொடர்புகொண்டாலும் சரியாக பதில் அளிக்கிறார்கள். இப்போது நாம் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதை விட்டு விட்டு யார் வந்து சொன்னாலும் நம்பி பணத்தை கொடுத்து ஏமார்ந்துவிடக்கூடாது. இவ்வாறு பலர் ஏமார்ந்து கூலி வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். அப்படி செல்பவர்கள் அங்கு இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதில் குறிப்பாக பணிப்பெண் வேலைக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. அங்கு பெண்களுக்கான முறையான சட்டத்திட்டங்கள் எதுவும் இல்லை. பணிப்பெண்களை முறைப்படுத்த எதுவும் விதிகள் இல்லை என்ற நிலையில, தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து பல பெண்கள் அங்கு பணிக்கு சென்று சொல்ல முடியாத பல கொடுமைகளை அனுபவித்துள்ளனர். பாலியல் ரீதியான சீண்டல்கள், உடல் மற்றும் மன ரீதியான பல பிரச்சினைகளை கடுமையாக சந்தித்திருக்கிறார்கள். இப்படி சென்று துன்ப்படும் பெண்களை அரசு துரித நடவடிக்கை எடுத்துதான் மீட்க வேண்டிய சூழல் உள்ளது. இங்கிருந்து பணிப்பெண்கள் வேலைக்கு சென்றால் அரசின் மேன்பவர் மூலமாகவோ, அல்லது பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலமாகவோதான செல்ல வேண்டும். மற்றபடி ஏஜெண்ட் மூலமாக போகவே கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும், வெளிநாடு செல்பவர்கள் பாதிக்கப்படும்போது தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்கிறார்கள். அந்தந்த நாடுகளில் பணியாற்றி வரும் வழக்கறிஞர்களை பிரதிநிகளாக தமிழக அரசு நியமிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனை வழக்க தமிழக அரசு இதை செய்ய வேண்டும். அவர்களை அனுகினால் அந்த நாட்டு சட்டத்திட்டங்கள் என்ன என்பதை அவர்கள் சொல்வார்கள். அதேபோல் சிறப்பாக செயல்படக்கூடிய சங்கங்களை கண்டறிந்து அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து அவர்களின் சேவைகளை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/lifestyle/tamil-most-important-information-that-foreign-job-seekers-should-know-532909/