20 10 2022
2020 – 2021ஆம் நிதியாண்டில் குறைவான வரி மதிப்பீட்டால் அரசுக்கு ரூ.236 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் 4 அறிக்கைகள் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன.
சரக்கு மற்றும் சேவை வரி, வணிக வரி, முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம், நில வருவாய் ஆகியவற்றில் 1,403 இனங்களில் குறைவான வரி மதிப்பீடுகள் செய்யப்பட்டு, ரூ.236 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விருதுநகர் வட்டத்தில் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் 14 முகவர்கள் மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின்படி கொள்முதல் வரி கட்டாமல் ரூ.235.14 கோடி மதிப்புள்ள பருப்பு வகைகளை கொள்முதல் செய்துள்ளதாகவும், அதில் ரூ.176.83 கோடி மதிப்புள்ள சரக்குகளை வேறு மாநிலங்களில் இருப்பு வைத்த வகையில் ரூ.5.48 கோடி வரி வராமல் போனதாகவும் CAG அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 – 2021-ம் நிதியாண்டில் வருவாய் வரவில் 0.26% என்ற மிகக்குறைந்த உயர்வே காணப்பட்டதாகவும், வரியல்லாத வருவாயில் கணிசமான குறைவு இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண உதவி, மகப்பேறு உதவி, இலவச மடிக்கணினி, சீருடை வழங்குதல் போன்ற மறைமுக மானியங்கள், முந்தைய ஆண்டைவிட ரூ.6,746 கோடி உயர்ந்ததாகவும், இந்த உயர்வுக்கு கொரோனா ஊரடங்கை சமாளிக்க மக்களுக்கு வழங்கப்பட்ட பண உதவி முக்கிய காரணமாகும் என்றும், இந்த செலவு, மானியத்துக்கு பதில் மானிய உதவி என்று தவறாக வகைப்படுத்தப்பட்டதாகவும் CAG அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மானாவாரி பகுதி மேம்பாடு என்பது பயிர்கள், தோட்டக்கலை, கால்நடை, மீன்பிடி, வனவியல் போன்ற பல விவசாய அம்சங்களை உள்ளடக்கியது. இந்நிலையில், மானாவாரி பகுதிகளுக்கு பதிலாக நீர்ப்பாசன நிலங்களில் இந்தத் திட்டம் முறையற்ற வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் பயன்பெற்ற சில விவசாயிகளுக்கு மானாவாரி மற்றும் நன்செய் ஆகிய 2 நிலங்களும் இருந்ததாகவும், நன்செய் நிலம் கொண்டிருந்தவர்கள், மானாவாரி விவசாயம் செய்து வருவதாக அரசு கூறியுள்ளது எனவும் CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி வளர்ப்பு அலகுக்கான துணைக் கூறுகளை சரிவர செயல்படுத்தாததால் 169 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ.10.34 லட்சம் பயனற்றதாகிவிட்டதாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர்களால் கொள்முதல் நடைமுறை மீறப்பட்டதால் ரூ.3.22 கோடி தேவையில்லாத செலவு ஏற்பட்டதாகவும், கட்டுமானத் தொழிலாளர்கள் தங்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் எழிச்சூர் மற்றும் தையூரில் தலா 1,000 தொழிலாளர்கள் தங்கும் வசதி கொண்ட 2 விடுதிகள், கட்டப்பட்டது முதல் பயன்படுத்தப்படாமல் இருந்ததால் ரூ.31.66 கோடி வீண் செலவு ஏற்பட்டதாகவும் CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/tamil-nadu-government-lost-rs-236-crore-due-to-underassessment-of-tax-in-the-last-financial-year.html