வெள்ளி, 21 அக்டோபர், 2022

வங்க கடலில் உருவாகும் ‘சித்ரங்’ புயல்; தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

 

தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிற 23ம் தேதி மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுவடைய உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ தூரம் வரை பரந்து விரிந்துள்ளது. வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்கிறது.

அது நாளை மறுநாள் (22ம் தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வருகிற 23-ந்தேதி புயலாக வலுவடைய உள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட ‘சிட்ரங்’ என்ற பெயர் வைக்கப்பட உள்ளது.

இந்த புயல் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை முதலில் தாக்கும். வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாகே, கர்நாடகாவின் தெற்கு பகுதிகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய இடங்களிலும் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதிய புயல் உருவாவதை தொடர்ந்து பல கடலோர மாவட்டங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



source https://news7tamil.live/chitrang-storm-forming-in-bay-of-bengal-chance-of-rain-for-4-days-in-tamil-nadu.html