புதன், 19 அக்டோபர், 2022

ஜெயலலிதா மரணம்; திருக்குறளில் விளக்கமளித்த நீதியரசர்

 18 10 2022

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையின் இறுதியில் இடம் பெற்றிருக்கும் திருக்குறள் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தியது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கையை நீதியரசர் ஆறுமுகசாமி, கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார்.

இந்த அறிக்கையில் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருப்பதாகவும், எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் கூறியிருந்தார். அதன்தொடர்ச்சியாக சட்டப்பேரவை இன்று கூடியதும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையின் நிறைவாக இடம் பெற்ற திருக்குறள் ஒன்று அனைவரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதில்,

“காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.”

என்ற அதிகாரம் 50ல் இடனறிதல் என்ற தலைப்பில் இடம்பெறும் 500வது திருக்குறளை குறிப்பிட்டு தமது அறிக்கையை நிறைவு செய்திருக்கிறார் நீதியரசர் ஆறுமுகசாமி. அந்த திருக்குறளுக்கான மு.வரதராசரின் விளக்கத்தையும் நீதியரசரே பதிவு செய்துள்ளார்.

“வேல் ஏந்திய வீரரை கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்” என்று திருக்குறள் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருக்குறள் தான் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

source https://news7tamil.live/death-of-jayalalithaa-justice-who-explained-in-thirukkural.html