வியாழன், 20 அக்டோபர், 2022

நாங்கள் மிகவும் பழைமையான கட்சி. ஜனநாயக முறைப்படி இந்தத் தேர்தலை நடத்தியிருக்கிறோம்

 

19 10 2022

ஆர்.எஸ்.எஸ்.ஸின் ரப்பர் ஸ்டாம்ப்தான் பாரதிய ஜனதா அரசாங்கம் என எம்.பி. ஜோதி மணி கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்காக தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்.19) எண்ணப்பட்டன. பெருவாரியான வாக்குகள் பெற்று மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார்.
ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்ற சசி தரூர் தோல்வியுற்றார். தொடர்ந்து, தேர்தலில் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சசி தரூர் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில் கரூர் மக்களவை காங்கிரஸ் எம்.பி., ஜோதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பாரதிய ஜனதா அரசாங்கம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ரப்பர் ஸ்டாம்ப்.
நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரின் தனிப்பட்ட ரப்பர் ஸ்டாம்ப்தான் அக்கட்சியின் தலைவர் ஜெயப்பிரகாஷ் நட்டா. ஆகவே பாரதிய ஜனதா கட்சியினர் எங்களையும் அவ்வாறு நினைத்துக் கொள்ளக் கூடாது.

நாங்கள் மிகவும் பழைமையான கட்சி. ஜனநாயக முறைப்படி இந்தத் தேர்தலை நடத்தியிருக்கிறோம். மல்லிகார்ஜூன கார்கேவை பொறுத்தவரை மாணவர் காங்கிரஸாக இருந்து உயர்ந்துள்ளார்.
7 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்தவர். மத்திய அமைச்சராகவும், மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

காங்கிரஸின் மாநிலங்களவை தலைவராகவும் இருந்துள்ளார். அப்போதைய தலைவர் சோனியா காந்தியும், மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுத்துள்ளார்” என்றார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/karur-mp-jothimani-says-bjp-government-is-a-rubber-stamp-of-rss-528169/