23 10 2022
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தனிமைப்படுத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவிற்கு வாழ்த்துகள். உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் தேர்தல் நடத்தி, நேரு குடும்பத்திற்கு அப்பாற்பட்டவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது காங்கிரஸ் மீதான நம்பத்தன்மையை உயர்த்தியிருக்கிறது என்றார்.
பாஜகவிற்கு எதிரான அரசியல் சக்திகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மல்லிகார்ஜூன கார்கே முன்னெடுக்க வேண்டும். மூன்றாவது அணி ஒன்று ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ஆந்திர சுங்கச்சாவடியில் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதிகளைக் கொண்டு கொடூரமான ஆயுதங்களால் தாக்குதல் நடந்துள்ளது. கட்டணம் செலுத்துவதில் தகராறிருந்தால் வழக்குப்பதிவு செய்திருக்கலாம், கைது செய்திருக்கலாம். இரு மாநில காவல்துறையினரும் கலந்துபேசி எதிர்காலத்தில் இத்தகைய வன்முறைகள் நிகழாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து ஊடகவியலாளர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தது மிகுந்த துயரமளிக்கின்றது. இதுபோன்ற விபத்துகள் நிகழாதவாறு சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நெல்லூரில் குடும்பத்தோடு போராடும் தமிழர்களை அழைத்து வரவேண்டும். ஆட்சிக்கு வந்தால் ரூபாய் மதிப்பை உயர்த்துவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனிமைப்படுத்தப்படும். காங்கிரஸ், திமுக அல்லாத கூட்டணியை அமைக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கனவு காண்கிறார். ஜெயலலிதாவின் இறப்பை புலாய்வு நடத்துவதற்கு அரசு முன்வரவேண்டும். அருணா ஜெகதீசன் அறிக்கை அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்திய கடற்படையை சார்ந்தவர்களே தமிழ்நாட்டின் மீன்பிடி படகு என கண்டறிந்த பிறகும் தாக்குதல் நடத்தியிருப்பதால், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
source https://news7tamil.live/bjp-will-be-isolated-in-parliamentary-elections-thirumavalavan-mp.html