செவ்வாய், 25 அக்டோபர், 2022

சென்னையில் அதிகரித்த காற்று மாசு

 25 10 2022

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் அதிகளவு காற்று மாசு பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் ஆரவரமாக தீபாவளியை கொண்டாடினர். மேலும் கொரோனா காலக்கட்டத்தில் இருந்து மீண்டு வந்த பொதுமக்கள், இந்தாண்டு தீபாவளியை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இதனிடையே, தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்ததால், சென்னையில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் காற்றில் நுண்துகள்களின் (PM2.5)அளவு 109 என இருந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் 192 என்ற அளவாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பான நிலையில் இருந்த காற்று, மோசமான நிலைக்கு தரம் குறைந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மணலி, ஆலந்தூர், அரும்பாக்கம், வேளச்சேரி, எண்ணூர், ராயபுரம், பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இடங்களில் காற்றின் தரம் அதிகளவு மாசு அடைந்துள்ளதாகவும் குறிப்பாக மணலி, ராயபுரம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்திருந்த நிலையில், பொதுமக்கள் நேற்று காலையில் இருந்தே பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இதனால் காற்று மாசு அதிகரித்துள்ளதாகவும், இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.



source https://news7tamil.live/diwali-festival-increased-air-pollution-in-chennai.html