27 10 2022
சென்னை அம்பேத்கர் மணிமண்டபம் புதிப்பித்து இன்று திறந்துவைக்கப்பட்டது. மேலும், மணிமண்டபத்தில் அம்பேத்கரின் முழு உருவ வெங்கல சிலையை திறந்துவைப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வருகைதந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “புரட்சியாளர் அம்பேத்கர் மணிமண்டபம் புதுப்பிக்கப்படவேண்டும், நல்லமுறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நீண்டகாலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வைத்தோம். கடந்த அதிமுக ஆட்சியின் போதும் இந்த கோரிக்கையை அன்றைய முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.
பராமரிப்பின்றி கிடக்கிறது, நூலகம் செயல்பாட்டில் இல்லை, கழிப்பறை பராமரிப்பில் இல்லை, பாதுகாப்பு இல்லாத நிலையில் மணிமண்டபம் கிடக்கிறது என்கிற கோரிக்கையை அதிமுக ஆட்சியின் போதும் முன்வைத்தோம்.
தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினிடமும் இந்த கோரிக்கையை எழுப்பினோம். அதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார். தற்போது மணிமண்டபம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது, நூலகம் மிக சிறப்பான முறையிலே மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான நூல்கள் இடம்பெற்றுள்ளன.
கழிப்பறைகள் முழுமையாக மாற்றி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், பூங்கா சீரமைக்கப்பெற்று, அந்த பூங்காவில் முழு உருவ வெங்கல திருவுருவ சிலையை புரட்சியாளர் அம்பேத்கருக்கு தமிழக அரசு நிறுவியிருக்கிறது. மேலும், அந்த பூங்காவில் புத்தர் சிலையும் நிறுவப்பட்டிருக்கிறது.
இப்படி எமது கோரிக்கையை ஏற்று மிக வேகமான முறையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு விசிக-வின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறுகிறார்.
மேலும், கோவை சம்பவத்தைக் குறித்து அவர் பேசியதாவது, “இதில் பன்னாட்டு பயங்கரவாதத்தின் தொடர்பு இருப்பதாக காவல்துறை அஞ்சுகிறது. அதன் அடிப்படையில் சிலரை கைது செய்திருக்கிறது. தமிழக காவல் துறை மற்றும் தமிழக முதல்வரின் நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று பாராட்டுகிறது.
யாராக இருந்தாலும், எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கையில் எடுப்பது ஏற்புடையதல்ல. அதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.
என்.ஐ.ஏ. இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. வேறென்ன கோரிக்கை வைத்து அவர்கள் கடையடைப்பு நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. கடையடைப்பின் மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்க கருதுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. பயங்கரவாத தொடர்பு இருக்கிறது என்ற நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதை ஆய்வு செய்வதற்கு முன் வந்திருக்கின்ற நிலையில், அதற்கு ஒத்துழைப்பு நல்குவதே ஜனநாயம் ஆகும். பா.ஜ.க இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்” என்று கூறுகிறார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/thol-thirumavalavan-talks-about-coimbatore-car-blast-issue-532212/