வியாழன், 27 அக்டோபர், 2022

இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள் – 1938 முதல் 2022 வரை; ஒரு பார்வை

 

’’இந்திய சுதந்திரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள், தற்போது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தி என்கிற மொழிக்கு எதிர்ப்பில்லை. அதை கட்டாயம் என்று திணிப்பதற்கே எதிர்ப்பு என்கிறார்கள் போராடும் தலைவர்கள்.

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி உருவாக்கப்பட்டு, 60 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்தி பேசாத மாநிலங்கள் விருப்பத்திற்கு மாறாக இந்தி திணிக்கப்படாது என்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்கலால் நேருவும் உத்தரவாதம் அளித்துள்ளார். ஆனாலும் இந்தி திணிப்பு அச்சமும் அதற்கு எதிரான போராட்டங்களும் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு முந்தைய போராட்டங்களைப் பார்க்கலாம்…

கடந்த 1938ம் ஆண்டு பள்ளிகளில் இந்தி கட்டாய பாடம் என்று அப்போதைய மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் ராஜாஜி அறிவித்தார். இது, ”மொழித் திணிப்பு மட்டுமல்ல, இன அடக்குமுறை. மொழியை அழித்து, தமிழர் கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை அழிக்கும் முயற்சி” என்று மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், உமா மகேசுவரனார் உள்ளிட்ட அறிஞர்களும், பெரியார், அண்ணா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டை திருச்சியில் கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்தினார்.

கடந்த 1938ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ”தமிழ்நாடு தமிழருக்கே” என்கிற முழக்கத்தையும் பெரியார் முன்வைத்தார். போராட்டங்களில் ஈடுபட்ட தலைவர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில், நடராஜன், தாளமுத்து களப் பலியாகினர். ஆனாலும் தொடர்ந்த போராட்டங்களினால், 1940ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டாய இந்தித் திணிப்பு கைவிடப்பட்டது.

சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கிய கட்டாய இந்தி திணிப்பு முயற்சி சுதந்திரத்திற்கு பின்னரும் தலை தூக்கியது. கடந்த 1948ம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்த போது பள்ளிகளில் மீண்டும் இந்தி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. போராட்டங்கள் வலுத்தன. இதையடுத்து 1950ம் ஆண்டு இந்தி கட்டாயம் என்பது கைவிடப்பட்டது.

இதையடுத்து 1952 தொடங்கி 1965ம் ஆண்டு வரை இந்தியை கட்டாயமாக்கும் முயற்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்தது. இதற்கு எதிராக 1964-65ல் ஆண்டு தலைவர்கள், அறிஞர்கள் மீண்டும் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், ’இந்தி கட்டாயம்’ என்று 1938ல் சொன்ன ராஜாஜியும் பங்கேற்று, தான் முன்பு எடுத்த முடிவு தவறென்று உணர்த்தினார். அப்போதைய மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியன், ஓ.வி.அழகேசன் ஆகியோர் பதவியில் இருந்து விலகினர். போராட்டம் நடத்திய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது…


ஆம்.. . வரலாற்று திருப்புமுனையாக மாணவர்கள் போராட்டக் களத்திற்கு வந்தனர். அகில இந்திய இந்தி எதிர்ப்பு குழுவை உருவாக்கினர். மதுரையில் ஊர்வலமாக சென்ற மாணவர்கள் மீதான தாக்குதல் போராட்டத்தை மேலும் வேகப்படுத்தியது. இன்னைக்கு இருப்பது போல் வாட்ஸ் அப் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு வசதிகளே இல்லாத நிலையில், தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. ஆனாலும் மாணவர்கள் பின்வாங்கவில்லை. திருச்சியில் மாணவர்களின் ஊர்வலத்தை தடுக்க சென்ற மாவட்ட ஆட்சியர் சொக்கலிங்கம் என்பவர், அவரும் மாணவர்களோடு ஊர்வலத்தில் நடந்து சென்றது பெரிதும் பேசப்பட்டது.

இதற்கிடையில், 1964ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திருச்சி ரயில்வே சந்திப்பில், கீழப்பழுவூர் சின்னச்சாமி, ’தமிழ் வாழ்க…இந்தி ஒழிக’ என்று முழக்கமிட்டபடி தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார். இவரைத் தொடர்ந்து விராலிமலை சண்முகம், கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, பீளமேடு தண்டபாணி உள்ளிட்ட பலர் தீக்குளித்தும், விஷமருந்தியும் இந்தித் திணிப்பைக் கைவிடக் கோரி உயிரை மாய்த்துக் கொண்டனர்.

மாநிலம் முழுக்க விடாது நடைபெற்ற போராட்டங்களால் கட்டாய இந்தி என்கிற முடிவை கைவிட்டது மத்திய அரசு. நேருவின் வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் உறுதியளித்தார். இந்தித் திணிப்பிற்கு எதிரான அன்றைய போராட்டங்கள் அரசியல் மாற்றத்தையும் ஆட்சி மாற்றத்தையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது.

இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஜனவரி 25ம் தேதி மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், இப்போதும் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி, கடந்த15ம் தேதி திமுக மாணவரணி மற்றும் இளைஞரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கவிஞர் வைரமுத்து தலைமையில் தமிழ்க் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டுமின்றி, மேற்கு வங்கம் வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நீண்டுள்ளன. அண்மையில், அண்ணா, கருணாநிதி படங்களுடன் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றன. தமிழ்நாட்டின் நியாயத்தை பிற மாநிலங்களும் உணரத் தொடங்கியுள்ளன என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், சிலரால் இந்தி மொழிக்கு எதிரான போராட்டமாக புரிந்து கொள்ளப்படுகிறது. முதல் போராட்டம் நடைபெற்ற 1938ம் ஆண்டுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் இந்தி பிரச்சார சபா உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அங்கு சேர்ந்து இந்தியைக் கற்றுக் கொண்டும் வருகிறார்கள். எனவே, இந்தி மட்டுமில்லங்க எந்த மொழிக்கும் நாங்க எதிரியல்ல. கட்டாய இந்தித் திணிப்பையே எதிர்க்கிறோம் என்கிறார்கள் போராடும் தலைவர்கள்.

இந்தி பேசாத மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தி திணிக்கப்படாது என்று நேரு அளித்த வாக்குறுதி நிலைக்க வேண்டும். இந்தியாவின் பன்முகத் தன்மை காக்கப்பட வேண்டும் என்கிறார்கள் மூத்த தலைவர்கள்.

source https://news7tamil.live/anti-imposition-struggles-1938-to-2022-one-look.html