19 10 2022
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து எழுந்த சந்தேகங்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள 5 முக்கிய அம்சங்கள் குறித்து இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அப்போது, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.
இதனால் தமிழக அரசு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், 2017 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
இடையில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை 2 ஆண்டுகள் முடக்கப்பட்டிருந்தாலும், 2022 ஆம் ஆண்டு மார்ச் 7 முதல் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையைத் தொடங்கியது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என 159 பேரிடம் விசாரனை நடைபெற்றது.
அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி சமர்ப்பித்தது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் ஜெயலலிதா மயக்கம் அடைந்த பிறகு, நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மர்மமாகவே இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஜெயலலிதாவைப் பரிசோதித்த அமெரிக்க மருத்துவர் சமீன் சர்மா, அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்திருந்தார். ஆனால், அது கடைசிவரை செய்யப்படவில்லை. அது ஏன் என்று தெரிவிக்கப்படவில்லை.
- எய்ம்ஸ் மருத்துவக் குழு 3 முறாஇ அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தாலும், அவர்கள் ஜெயலலிதாவுக்கு முறைப்படி ஒருமுறைகூட சிகிச்சை அளிக்கப்படவில்லை.
- ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவிடாமல் சசிகலா தடுத்துள்ளார். சசிகலா – ஜெயலலிதா இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக சசிகலா ஆஞ்சியோ சிகிச்சையைத் தடுத்திருக்கலாம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
- ஜெயலலிதா இறந்த நேரம் 05.12.2016 இரவு 11.30 மணி என்று மருத்துவமனை கூறும் நிலையில், அதற்கு முந்தைய நாளான 4.12.2015 அன்று மதியம் 3-3.50-க்குள் அவர் இறந்துவிட்டதாக சாட்சிகள் கூறுகின்றன. எனவே சசிகலாவை குற்றவாளியாகக் குற்றம் சாட்டுவதைத் தவிர ஆணையம் வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது இந்த அறிக்கை கூறுகிறது.
- ஜெயலலிதாவின் கால்கள் துண்டிக்கப்பட்டதாகவோ, அல்லது அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதாகவோ எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை கூறுகிறது.
எனவே ஆணைய விசாரணை அறிக்கையின் படி, சசிகலா, டாக்டர் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.
source https://tamil.indianexpress.com/video/arumugasamy-commission-5-important-statements-on-jayalalithaa-death-528109/