வியாழன், 27 அக்டோபர், 2022

புதிய வாகன திருத்தச் சட்டம் அமல்; விடிய விடிய சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்

 27 10 2022

புதிய மோட்டார் வாகன திருத்துச் சட்டம் அமலுக்கு வந்ததையொட்டி இரவு முழுக்க சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமுறை மீறிய வாகனங்களுக்கு அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டது. இதனையடுத்து புதிய அபராத தொகையை வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிய அபராத தொகை வசூலிக்கப்படும் எனவும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்று காலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதில் பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இரவு முழுவதும் வாகனத்தை தணிக்கை மேற்கொண்டனர். அதில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்கள் மற்றும் உடன் செல்லும் நபர்கள் மீதும் வழக்கு பதியப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் ஒரு சில நபர்களிடமும் முதல் நாள் என்பதால் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இருந்தபோதிலும் மது அருந்திவிட்டு வரும் நபர்கள் போக்குவரத்து போலீசாரிடம் ரூ.10,000 அபராதத்தை செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதால் பிரீத்திங் அனலைசரை ஊதாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மது அருந்தியதால் அபராதம் செலுத்தாத நபர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும் கார்களில் குடித்துவிட்டு வரும் நபர்களை மாற்று வண்டியில் அனுப்பியும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.


source https://news7tamil.live/implementation-of-new-vehicle-amendment-act-the-police-involved-in-the-dawn-search.html