26 10 2022
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடந்த அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற எம்.பிக்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு முறையில் தேர்தல் நடைபெற்றது. 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து இன்று (அக்டோபர் 26) டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்றுக் கொண்டார். இடைக்கால தலைவராக இருந்த சோனியா காந்தி கார்கேவிடம் தலைவர் பொறுப்புகளை ஒப்படைத்தார். கிட்டத்திட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸுக்கு முழு நேர தலைவர் மற்றும் புதிய தலைவர் பொறுப்பேற்றுள்ளது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
தொழிலாளியின் மகன் காங்கிரஸ் தலைவர்
பதவியேற்றப்பின் கட்சித் தொண்டர்களிடம் பேசிய கார்கே, “ஒரு தொழிலாளியின் மகன், சாதாரண காங்கிரஸ் ஊழியர், கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றது உணர்ச்சிகரமான தருணம். இதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி.
1969-ல் ஒரு தொகுதி குழுத் தலைவராக எனது பயணத்தைத் தொடங்கினேன். இன்று இவ்வளவு பெரிய உயர் பதவிக்கு என்னை உயர்த்தியுள்ளீர்கள். மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு போன்றவர்களால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது எனது பாக்கியமும் பெருமையும் ஆகும்.
தலைவர் என்ற முறையில் எனது தொண்டர்களை கவனிப்பது தலையாய கடமையாகும். ஒற்றுமையுடன் செயல்படுவோம். அனைவருக்குமான சமமான இந்தியாவை உருவாக்குவோம். நாங்கள் இந்த நாட்டின் அரசியலமைப்பை நிலைநிறுத்துவோம், அனைவரின் உரிமைகளையும் மதித்து சம வாய்ப்புகளை வழங்குவோம், வெறுப்பை பரப்புபவர்களை தோற்கடிப்போம், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பட்டினிக்கு எதிராக போராடுவோம்” என்று கூறினார்.
இமாச்சலப் பிரதேசம், குஜராத் தேர்தல்
தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல்கள் குறித்து பேசிய கார்கே, “இந்த மாநிலங்களில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நாம் நம் கட்சியின் பலத்தை காட்ட வேண்டும். நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம். நாம் மகாத்மா காந்தி வழிவந்தவர்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். காங்கிரஸ் தொண்டர் பயத்தை போக்கினால், பெரிய ராஜ்ஜியங்களும் தோற்கடிக்கப்படும்” என்றார்.
உதய்பூர் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானம் குறித்து பேசுகையில், 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்சியில் 50 சதவீத பதவிகள் வழங்கும் முறை செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
உறுப்பினர்கள் ராஜினாமா
கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் தலைவர் சோனியா காந்தி, “காங்கிரஸ் தலைவர் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு. நான் என் கடமைகளை நேர்மையுடன் செய்ய முயற்சித்தேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மாற்றம்தான் உலகின் ஆட்சி. காங்கிரஸ் முன்பு நிறைய பிரச்சனைகளை சந்தித்தது. ஆனால் இந்த பிரச்சனைகளை சமாளித்து மீண்டு வருவோம் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, கார்கேவிடம் வெற்றி பெற்றதற்கான தேர்தல் சான்றிதழை வழங்கினார். பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் அக்டோபர் 24 முதல் 26 வரை 3 நாட்கள் இடைவெளியில் உள்ளார்.
புதிய தலைவராக கார்கே பொறுப்பேற்றதையடுத்து, காங்கிரஸ் காரியக் கமிட்டி அனைத்து உறுப்பினர்கள், பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தங்களது பதிவுகளை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவரிடம் கொடுத்தனர். இப்பதவிகளுக்கு புதிய நபர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவர். தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்பட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கார்கேவிற்கு வாழ்த்து கூறினார்.