29 10 2022
திருச்சியில் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பல நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. நடப்பு கல்வியாண்டு முதல் எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா, நூலகங்களில் wi-fi வசதி, மாணவர்களின் உடல்நலன் காக்க சிறப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து நூலகங்களில் மெய்நிகர் நூலகம் (Virtual Reality Library) அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் நூலகங்கள், அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் லால்குடி கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் பலரும் இந்த மெய்நிகர் நூலகத்தை பயன்படுத்தி மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், “தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மெய்நிகர் நூலகம், திருச்சி மாவட்டம் லால்குடியில் தொடங்கப்பட்டுள்ளது லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு பெருமை சேர்த்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் துறையூர் முசிறி ஆகிய தொகுதிகளில் உள்ள நூலகங்களுக்கும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. குழந்தைகள் மாணவர்கள் எளிதில் கண்டுணர இயலாத வானிலைஅறிவியல், ஆழ்கடல், அடர்ந்த காடுகள் அறிவியல், பரிசோதனைகள், உயிரியல், உடல் உறுப்பு செயல்பாடுகள், விலங்குகளின் அறிவியல், தொல்லியல் போன்ற பல பாடங்களை எளிதில் கண்டு கேட்டு உணர்ந்து முழுமையாக அறிந்து கொள்ள இயலும். இதனை பயன்படுத்தி லால்குடி தொகுதியில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 150 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
source https://news7tamil.live/virtual-library-with-modern-technology-inaugurated-by-minister-anbil-mahesh.html