21 10 2022
டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசுகள் தங்கள் அதிகார வரம்பிற்குள் நடைபெறும் வெறுப்புப் பேச்சுக் குற்றங்களுக்கு எதிராக எந்த புகாருக்கும் காத்திருக்காமல் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டது.
நாட்டில் நடைபெறும் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “பல்வேறு மதங்களைச் சேர்ந்த சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ முடியாவிட்டால் சகோதரத்துவம் இருக்க முடியாது.
பல்வேறு தண்டனை விதிகள் இருந்தபோதிலும், வெறுப்புப் பேச்சுக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை (அக்.21) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சட்டப்பிரிவு 51 ஏ, அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. மதத்தின் பெயரால் நாம் எங்கு செல்கிறோம்.
இது மிகவும் தீவிரமான பிரச்னை. ஆகவே, டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசுகள் தங்கள் அதிகார வரம்பிற்குள் நடைபெறும் வெறுப்புப் பேச்சுக் குற்றங்களுக்கு எதிராக எந்த புகாருக்கும் காத்திருக்காமல் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதாடினார்.
source https://tamil.indianexpress.com/india/country-secular-take-suo-motu-action-against-hate-speeches-sc-tells-3-states-529337/