திங்கள், 31 அக்டோபர், 2022

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை” – ராஜீவ் காந்தி

 

அண்ணாமலை வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலை, ஒரு இக்கட்டான வழக்கில் தினந்தோறும் ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை காவல்துறையை களங்கப்படுத்துவது போல் உள்ளது.

தனது வாக்கு வங்கியாக வைத்து கொள்ள கோவையை எப்போதும் பதற்றத்துடன் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார். கோவை கார் வெடிப்பு குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை என நாங்கள் கேட்டால் அது எவ்வளவு முதிர்ச்சியற்றதாக இருக்கும். பால்வாடித் தனமான அரசியலை அண்ணாமலை செய்து வருகிறார்.

மத்திய உளவுத்துறை முபினை கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால் அவரது பெயர் அந்த அறிக்கையில் இல்லை. ஐஎஸ்ஐஎஸ்- ஐ கண்காணிக்கும் பொறுப்பு என்ஐஏக்கு தான் உள்ளது. அண்ணாமலை வைக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை.

கோவை மாநகரில் உளவுத்துறை அதிகாரி நியமிக்கப்பட்டாமல் இருப்பதாக கூறும் விவகாரத்தில் அண்ணாமலை பொய் சொல்கிறார். அடிப்படை ஆதாரமில்லாமல் பேசுகிறார். கோவை கார் வெடிப்பில் தமிழக காவல்துறையின் நடவடிக்கையால் தான் மிகப்பெரிய பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உளவுத்துறையிடம் இருந்து எந்த அறிக்கையும் தமிழக அரசுக்கு வரவில்லை. கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், கண்ணுக்கு தெரியாத சட்டம் ஒழுங்கு பிரச்னையை அண்ணாமலை கையிலெடுத்துள்ளார்.

source https://news7tamil.live/annamalais-allegations-have-no-basis-rajiv-gandhi.html