10 10 2022
நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசு கர்நாடக அரசு என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.
கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். 3 நாட்கள் கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 11ம் தேதி கேரளாவில் தனது நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 19 நாட்கள் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகாவில் தனது நடைபணத்தை தொடங்கினார்.
33வது நாளான இன்று கர்நாடகாவின் ஹிரியூர் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் அங்கு பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசு கர்நாடக அரசு. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 40% கமிஷன் எடுக்கிறார்கள். 13,000 தனியார் பள்ளிகள் 40% கமிஷன் கொடுத்துள்ளன. இதை நான் சொல்லவில்லை. பாஜக எம்எல்ஏக்களே இது மிகவும் ஊழல் நிறைந்த அரசு என்று கூறுகிறார்கள்.
2,500 கோடிக்கு முதல்வர் பதவியை வாங்கலாம் என்று பாஜக எம்எல்ஏவே கூறியுள்ளார். K’taka இல் வேலைகள் விற்பனைக்கு உள்ளன. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பதவி ரூ.80 லட்சத்துக்கு விற்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் விற்கப்படுகின்றன. பொறியியல் பணியிடங்கள் விற்கப்படுகின்றன. இந்த மக்களுக்கு சேர வேண்டிய அனைத்தையும் அவர்கள் விற்கிறார்கள்.
வெறுப்புக்கும், காதலுக்கும் இடையிலான இந்த போர் புதிதல்ல. பசவண்ணா, நாராயண குரு, அம்பேத்கர் ஆகியோர் நடத்திய அதே போர் இது. இந்த மாபெரும் தலைவர்களின் குரல் தான் தற்போது ஒலிக்கிறது. இந்த தலைவர்கள் யாரும் வன்முறையையோ, வெறுப்பையோ போதிக்கவில்லை.
இந்த யாத்திரை பாஜக-ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பு, வன்முறை மற்றும் கோபத்திற்கு எதிரானது. இந்தியா பிளவுபடாது. இந்த ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் பாஜகவுக்கு நான் சொல்ல விரும்புவது, இந்தியா ஒன்றுபட்டு நிற்கும் என்பது தான். இந்த யாத்திரையில் அந்த செய்தி தெளிவாக தெரிகிறது. யாத்திரையில் வன்முறை, வெறுப்பு, கோபம் எதுவும் இல்லை என்று கூறினார்.