சனி, 10 டிசம்பர், 2022

மாண்டஸ் புயல்: பிற்பகலுக்குள் 100% முழுமையாக மின் விநியோகம் – அமைச்சர் செந்தில்பாலாஜி

 10 12 2022

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு மெல்ல மெல்ல கரையைக் கடக்கத் தொடங்கியது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. காற்று பலமாக வீசியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கியபோது, பலத்த காற்று, மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. சில இடங்களில் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று பிற்பகலுக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்ய பின் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி, “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்த மாவட்டங்களில் 355 துணை மின்நிலையங்கள் உள்ளன. இதில் 10 மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டன. சென்னையில் 1 இடத்தில் மட்டும் மரம் விழுந்து மின்சாரம் பாதிக்கப்பட்டது. மற்ற இடங்களில் பாதுகாப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் இன்று பிற்பகலுக்குள் 100% முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின் ஊழியர்கள் இந்த பகுதிகளில் ஆய்வு செய்தபின் மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்னகத்திற்கு நேற்று 26,251 புகார்கள் வந்தன. இந்த புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/electricity-will-restore-before-afternoon-says-minister-senthilbalaji-555778/

Related Posts: