கர்நாடகாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் முதலமைச்சர் நாற்காலி மேல்தான் குறிவைத்துள்ளனர். ஆனால் அங்கே முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த பலரும், 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடர்ந்து நீடித்ததே இல்லை என்பதுதான் வரலாறு.
மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் 1956-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் உருவாக்கப்பட்டது. முதலில் மைசூர் மாநிலம் என அழைக்கப்பட்டு வந்த இந்த மாநிலம், 1973-ம் ஆண்டு முதல் கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கர்நாடகா மாநிலம் உருவாக்கப்பட்டத்தில் இருந்து அதனை, செங்கல்ராய் ரெட்டி முதல் இப்போது முதலமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மை வரை 25 -க்கும் மேற்பட்ட முதலமைச்சர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஆனால், இவர்களில் பலருடைய ஆட்சிக்காலம் முழுமையாக அதாவது 5 ஆண்டுகள் நீடிக்கவே இல்லை.
SR பொம்மை, வீரேந்திர பாட்டீல், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவகவுடா, JH. பாட்டீல், SM கிருஷ்ணா, தரம்சிங், குமாரசாமி, எடியூரப்பா, சதானந்தா கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் என நீளும் முதலமைச்சர்கள் பட்டியலில், இவர்களில் எவருமே முழுமையாக 5 ஆண்டுகள் முதலமைச்சர்களாக இருந்தது இல்லை.
ஆனால் இவர்களுக்கெல்லாம் விதிவிலக்காக நிஜலிங்கப்பா (1962-68), தேவராஜா (1972-77), சித்தராமையா (2013-18) என இந்த 3 பேர் தான் 5 ஆண்டு காலம், முழுமையாக ஆட்சியில் நீடித்த முதல்வர்களாக இருக்கின்றனர். இதில் கூடுதல் செய்தி என்னவென்றால் இவர்கள் மூவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
கர்நாடகாவில் இதுவரை 1971, 1977, 1989, 2007 ஆகிய ஆண்டுகளில் 2 முறை என மொத்தம் 6 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 3 முதலமைச்சர்கள் மாறி மாறி ஆட்சி செய்த வரலாற்றையும் தாங்கி நிற்கிறது கர்நாடகா.
அதற்கு உதரணமாக கடந்த 2018 தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் – ஜனதா தளம் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. ஆனால் குமாரசாமி தலைமையிலான அரசு வெறும் ஒன்றரை ஆண்டுகள் தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. காரணம் JDS கட்சியில் இருந்த 17 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.
அவருக்கு பிறகு ஆட்சியை பிடித்தது பாஜக. அதில் ஓராண்டு முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, பதவியில் இருந்து விலக்கப்பட்டு அவருக்கு பிறகு, அதே கட்சியில் இருந்து பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பொறுப்பேற்று, தற்போது வரை கர்நாடக முதலமைச்சராக இருக்கிறார்.
கர்நாடக அரசியலில் இதுவரை 5 முறை இதேபோன்று நடந்துள்ளது. இந்த நிலையில் இன்னும் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் மக்கள் மனங்களை வென்று இந்த முறை பெரும்பான்மை பலத்துடன் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்? அப்படி பிடிக்கும் கட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
source https://news7tamil.live/tragedy-continues-for-karnataka-chief-ministers-will-election-2023-rewrite-history.html