வியாழன், 13 ஏப்ரல், 2023

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி; ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட மைக்கேல் ராஜ் பரபரப்பு வாக்குமூலம்!

 

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட மைக்கேல் ராஜ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர்.

ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி உள்ளிட்ட 11 பேர் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசாரால் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். மோசடி செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரொக்கமாக 5 கோடியே 69 லட்சம் ரூபாயும், 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களின் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்களும் கண்டறியப்பட்டன.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. அதேபோல அண்மையில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி ஹரீஷையும் 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையிலும், ஆருத்ரா மோசடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் தொடர்பு குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பாஜக-வில் ஓ.பி.சி பிரிவு மாநில துணைத் தலைவராக இருந்து வரும் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்கில் இருந்து தனக்கு வேண்டப்பட்டவர்களை காப்பாற்ற உதவி வந்ததாக தகவல் வெளியானது. அதேபோல ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் மற்றும் கைது செய்யப்பட்ட ரூசோ ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது.

அதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதமாக நோட்டீஸ் வழங்கியும் எந்தவித பதிலும் அளிக்காத ஆர்.கே.சுரேஷ், தனது வழக்கறிஞர்களை நேரில் அனுப்பி விளக்கங்களை தருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மட்டுமல்லாமல், பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் மத்திய விசாரணை அமைப்புகளும் தங்களது விசாரணையை துவங்கியுள்ளன. இந்த வழக்கில் கிட்டத்தட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக இன்னும் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆருத்ரா கோல்ட் ரேட்டிங் மோசடி விவகாரத்தில் ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட மைக்கேல் ராஜ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆருத்ரா கோல்ட் டிரேடிங் கம்பெனிகளின் வங்கிக் கணக்குகள் முழுவதையும் கையாண்டது மைக்கேல்ராஜ்.

இவர், சுமார் 1749 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்தது விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில்,  1749 கோடி ரூபாய் பணத்தை எந்தெந்த வங்கிக் கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதோ அவற்றின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த துவங்கியுள்ளனர்.

இவர், கடந்த மாதம் 29 ஆம் தேதி துபாய்க்கு தப்பி செல்ல முயலும் போது சென்னையில் கைது செய்யப்பட்ட மைக்கேல் ராஜை ஏழு நாள் போலீஸ் காவலுக்கு பிறகு சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக நிர்வாகி ஹரிஸிடம் மாநில பொறுப்பு பெறுவதற்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜரான ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பில் இருக்கும் டாக்டர் சுதாகர் பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டு உள்ளார்.

பணம் வாங்கியது ஏன் என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆர்.கே.சுரேஷின் வழக்கறிஞர்கள் அளித்த விளக்கங்களை ஏற்க மறுத்த பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், ஆர் கே சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியும் வெளிநாட்டில் இருந்து கொண்டு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


source https://news7tamil.live/arudra-gold-company-fraud-michael-raj-who-was-interrogated-for-seven-days-made-a-sensational-confession.html