வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக – திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது, சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திருப்பது தொடர்பாக பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் கலைஞர் இருந்தபோது 69 சதவீத இட ஒதுக்கீட்டை எப்படி கொண்டு வந்தாரோ,அதே போல இதையும் கொண்டு வர முயற்சி செய்கிறோம்.10 புள்ளி 5 சதவிகித இடஒதுக்கீடு என்பது எந்த நேரத்தில் கொண்டு வரப்பட்டது . தேர்தல் நேரத்தில் அவசரகோலத்தில் கொண்டு வரப்பட்டதால் தான் நீதிமன்றம் சென்று தடை விதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். மேலும், அதிமுக ஆட்சி கொண்டு வந்தது என்பதை பொருப்படுத்தமால் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், 10 புள்ளி 5 சதவிகித இட ஒதுக்கீட்டை செயல்படுத்ததற்கான முயற்சியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்பது உறுப்பினருக்கு தெரியும். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியில் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. மூன்று மாத காலத்திற்குள் பணியை நிறைவேற்றவில்லை என்பதால் தான் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், வன்னியர் உள் ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் அவசரமாக வெளியிட்டாலும், அதனை திமுக ஆட்சியிலும் செயல்படுத்தியதாக கூறினார். மீண்டும் அந்த தவறு வந்துவிடக்கூடாது என்பதற்காக 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளதாக கூறிய அவர், ஆணையம் 4 மாதங்களிலேயே அறிக்கையை தந்தால் தங்களைவிட முதலமைச்சர் அதிகம் மகிழ்ச்சியடைவார் என குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஒட்டுமொத்த வன்னியர்களும் திமுக பக்கமே இருக்கிறார்கள் என தெரிவித்தார். இதனை அடுத்து பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, வன்னியர் இட ஒதுக்கீடு உணர்வுப்பூர்வமான பிரச்னை என்பதால் பொறுமையாக கையாள வேண்டும் என தெரிவித்தார். மேலும், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் வேல்முருகன் கூறிய கருத்துக்களை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்லப்பெருந்தகை, இட ஒதுக்கீட்டின் கதாநாயகன் என்று கருணாநிதியை, ராமதாஸ் பாராட்டி மகாராஜா இருக்கை வழங்கியதை சுட்டிக்காட்டினார்.
- பி.ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/internal-reservation-issue-for-vanniyars-chief-minister-m-k-stals-statement.html