3 4 23
கலாஷேத்ராவில் எழுந்த பாலியல் புகார் தொடர்பாக, அக்கல்லூரி இயக்குநரை விசாரித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமாரி, பாலியல் புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுளார். மற்ற மூவரை கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று கூறியதாக தெரிவித்தார்.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் எழுந்தது தொடர்பாக, அக்கல்லூரி இயக்குநர் ரேவதியை ஆணையத்துக்கு அழைத்து திங்கள்கிழமை விசாரித்தார். விசாரணைக்கு பின்னர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நான் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு சென்றபோது கல்லூரி நிர்வாகிகள் யாரும் அங்கே இல்லை. அதனால், கல்லூரி இயக்குநரை மகளிர் ஆணையத்துக்கு வரச் சொன்னேன். அதற்கு காரணம், கலாஷேத்ரா கல்லூரியில் ஐ.சி கமிட்டி எப்படி செயல்படுகிறது. அதில் யாரெல்லாம் உறுப்பினராக இருக்கிறார்கள். கல்லூரியில் இருக்கும் மாணவர்களுக்கு ஐ.சி கமிட்டி இருக்கிறது என்பதை எப்படித் தெரியப்படுத்துகிறார்கள். வீவர்ஸ் கமிட்டி இருக்கிறதா? அவர்களுடைய பாதுகாப்புச் சூழல் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி கேட்டோம். அதற்கு அவர்கள் பதில் அளித்திருக்கிறார்கள்.
அடுத்தது, அவர்களுக்கு ஏப்ரல் 12ம் தேதி வரை தேர்வு இருக்கிறது. தேர்வு வரை அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதனால், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்களால் பாலியல் புகார் கூறப்பட்ட 4 பேரில் ஒருவர் ஹரி பத்மனைக் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மற்ற 3 பேரும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறேன். அதற்கும் அவர்கள் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இன்று திரும்பவும் மாணவர்கள் போராட்டம் நடத்துவதாகக் கேள்விப்பட்டோம். அவர்களுடைய கோரிக்கை என்ன என்றால், தேர்வு ஆன்லைனில் நடத்த வேண்டாம். ஆஃப்லைனில் நடத்த வேண்டும் என்று கேட்டார்கள். ஏனென்றால், எங்களுடைய திறமையை ஆஃப்லைனில் தான் காட்ட முடியும் என்று கூறுகிறார்கள்.
அதனால், கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர் தேர்வுகளை ஏப்ரல் 5ம் தேதியி இருந்து நடத்தப்போகிறோம் என்று கூறினார். இந்த தகவலை மதியத்திற்குள் மாணவர்களுக்கு தெரியப்படுத்துவதாகக் கூறியதாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமாரி கூறினார்.
மேலும், கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் தொடர்பாக உங்களுக்கு மேலும் புகார்கள் ஏதாவது வந்திருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமாரி, “ஆமாம், மாணவிகள் புகார் தெரிவிப்பதற்காக என்னுடைய மின்னஞ்சல் முகவரி கொடுத்திருக்கிறேன். என்னுடைய தொலைபேசி எண் கொடுத்திருக்கிறேன். அதன் மூலமாக, எனக்கு இ-மெயில் மூலமாக புகார் வந்திருக்கிறது. கலாஷேத்ரா கல்லூரி இயக்குநரிடம் ஐ.சி.சி கமிட்டி தொடர்பான ஆவணங்களைக் கேட்டிருக்கிறேன். மாணவிகளிடமும் நகல் கேட்டிருக்கிறேன். ஐ.சி.சி கமிட்டியை வலுப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு ஐ.சி.சி கமிட்டி இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலுவாகக் கூறினேன். அதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்.
கலாஷேத்ரா கல்லூரியில் 2018 முதல் மூன்று பாலியல் புகார்கள் வந்துள்ளன. கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி தரப்பில், ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். இயக்குநர் ரேவதியிடம் நடத்தப்பட்ட விசாரணையை பொதுவெளியில் கூற முடியாது. ” என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமாரி கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-womens-commission-chairman-enquiry-at-kalashethra-director-about-sexual-harrasement-complaints-626868/