5 4 2023
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. நாட்டில் நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 641 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை அதிரடியாக ஆயிரத்திற்கும் கீழாக குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 740 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் 23 ஆயிரத்து 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4 ஆயிரத்து 435 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், கொரோனா தொற்றால் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 916 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41லட்சத்து 79ஆயிரத்து 712 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், ஒரே நாளில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 86 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,66,16,373 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,979 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/in-india-the-number-of-corona-cases-exceeded-4-thousand-in-a-single-day.html