வியாழன், 6 ஏப்ரல், 2023

கொரோனா பரவல் மெல்ல அதிகரிப்பு: தினமும் 11,000 பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவு

 6 4 23 

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் நேற்று (ஏப்ரல் 5) புதிதாக 242 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,216-ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் கொரோனா தொற்று மார்ச் மாத இறுதியில் 689 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் தொற்று பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்படுவோர் சதவீதமும் 0.6ல் இருந்து 3 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 3,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது 11,000 ஆக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் மக்கள் தொகைக்கு ஏற்ப பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி சென்னையில் அதிகபட்சமாக 373 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 132 பேர், கோவையில் 92, கன்னியாகுமரி 75, சேலம் 77, திருவள்ளூர் 57, திருச்சியில் 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மற்றும் செங்கல்பட்டு (7.9%), கோயம்புத்தூர் (6.4%), திருவள்ளூர் மற்றும் திருச்சி (6%) ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 5%க்கும் மேல் பதிவாகியுள்ளது.

கோவையில் 2 பேர் பலி

கோயம்புத்தூரில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயதான பெண் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று புதன்கிழமை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருப்பூரைச் சேர்ந்த 82 வயது முதியவர் கோவை மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், இருமல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இணை நோயும் இருந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று மாலை உயிரிழந்தார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-to-conduct-11000-covid-19-tests-daily-629691/