சுற்றறிக்கை: 123/2023
தேதி: 03/04/2023
இறைவனின் திருப்பெயரால்..
ராம நவமியின் பெயரால் வடமாநிலங்களில் நடைபெறும் வன்முறை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.
ராம நவமி ஊர்வலம் என்ற பெயரால் வட மாநிலங்களில் அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்லாமியர்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் தாக்கப்பட்டிருப்பதுடன் வழிபாட்டுத் தலங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
சங்பரிவார அமைப்புகள் தான் நாடு முழுவதும் இத்தகைய வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
ராம நவமி ஊர்வலம் என்ற பெயரில் பீகார், டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் இத்தகைய வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
முஸ்லிம்களை தாக்குவதுடன் அவர்களின் உடமைகளும், கடைகளும், வீடுகளும் தீக்கிறையாக்கப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசம் மாநிலம் தலாப் சவுக், சஞ்சய் நகர், மற்றும் மோட்டிபுரா பகுதிகளில் இத்தகைய தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆனால் ம.பி காவல்துறை பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களில் 70 பேரை கைது செய்தது மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்று கூறி முஸ்லிம்களின் குடியிருப்புகளை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளது.
இதன் மூலம் வன்முறையாளர்களின் தாக்குதல் மற்றும் நீதிக்குப் புறம்பான காவல்துறையினரின் தாக்குதல் என்ற இருமுனைத் தாக்குதல்களுக்கு அங்குள்ள முஸ்லிம்கள் ஆளாகியுள்ளனர்.
பீகாரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது ஒரு மசூதியின் கோபுரத்தின் மீது காவிக் கொடியை ஏற்றியுள்ளனர்.
இந்த வன்முறையில் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வடமாநிலங்களில் பல இடங்களில் நடைபெற்றுள்ள இத்தகைய தாக்குதல்கள் மூலம் இந்திய மதச்சார்பின்மையை வெட்டிப் பிளந்து மத ரீதியிலான ஆட்சியை அமைத்து விடலாம் என சங்பரிவார சக்திகள் தப்புக் கணக்குப் போடுகின்றன.
சங்பரிவார சக்திகளின் இத்தகைய ஈனச்செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் இந்திய நீதிமன்றங்கள் நீதிக்கு சாட்சியாக இருந்து சரியான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் எனவும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் இத்தகைய தீய சக்திகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு :
ஆர் . அப்துல் கரீம்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்