செவ்வாய், 4 ஏப்ரல், 2023

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் ஒபெக் நாடுகள் – பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!!

 

4 4 23

கொளுத்தும் கோடை காலம் துவங்கி விட்டது. இதற்காகவே காத்திருந்த ஒபெக், நாள் ஒன்றுக்கு 11 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும் என அறிவித்துள்ளது. இனி பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிப்பது எப்படி என உலகமே விழி பிதுங்கி நிற்கின்றது. அதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

தனி மனித போக்குவரத்து, நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் என அனைத்திலும், எரிபொருளும், மின்சாரமும் இன்றியமையாததாக உள்ளது. எரிபொருளும், மின்சாரமும் தட்டுப்பாடின்றி, கட்டுப்படியாகும் விலையில் இருந்தால் தான் வளர்ச்சி சாத்தியமாகும். எரிபொருளாகவும், மின்சார உற்பத்தியிலும் பெரும்பாலும், பெட்ரோல், டீசல் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோலை நீர்ம தங்கம் எனவும் அழைக்கின்றனர்.

உலகின் பெட்ரோல், டீசல் தேவையை பெருமளவுக்கு சவுதி அரேபியா தலைமையிலான ஒபெக் நாடுகள் பூர்த்தி செய்கின்றன. மேலும், தங்கள் நாட்டின் வருவாயை பெருக்கவும், விநியோக அமைப்பில் கட்டுப்பாட்டை கொண்டு வரவும், கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலை நிர்ணயத்தில் ஒபெக் நாடுகள் இணைந்து செயல்படுகின்றன. சமீபத்திய ஒபெக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, மே மாதம் முதல், நாள் ஒன்றுக்கு 11 லட்சத்து, 60 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்தது. இந்த ஒற்றை அறிவிப்பால், விலைவாசி மேலும் உயருமா என்ற கவலையில் மக்களும், நாட்டின் பொருளதார வளர்ச்சிக்கு பாதிப்பா என உலக நாடுகளின் அரசுகளும், தொழில் உற்பத்தி, வர்த்தகம் பாதிக்குமா என தொழில் துறையினரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளியான உடனே கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 8 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. ஆசிய சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.07 சதவீதம் அதிகரித்து, 84 டாலராக உயர்ந்தது. அதேபோல் அமெரிக்காவில் WTI கச்சா எண்ணெய் விலை 5.17 சதவீதம் அதிகரித்து 80 டாலராக உயர்ந்தது. ரஷ்யா – உக்ரைன் போரால், ஏற்கனவே, கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில், ரஷ்யா நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்ததால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

கோடைக்காலத்தில் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளிலும் எரிபொருள், மின்சாரத்தின் தேவை அதிகமாகிறது. இதனால் பெட்ரோல், டீசலின் நுகர்வின் அளவும் கணிசமாக உயரும். மேலும் சில மாதங்களாக சற்று முடங்கியிருந்த சீன நாட்டின் பொருளாதாரம் , தற்போது மீண்டும் விரிவாக்கத்தில் உள்ளதால் பெட்ரோலிய பொருட்களின் தேவை அதிகமாகிறது. இதனால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தொட வாய்ப்புள்ளதாக, பெட்ரோலிய பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

80 சதவீதத்துக்கு அதிகமாக, இறக்குமதியில் கச்சா எண்ணெயை நம்பியுள்ளது இந்திய நாடு. கொரோனா தொற்றுக்கு பின், சரிவைச் சந்தித்தாலும், மீண்டும் மேலே வர துடிக்கும் உலக நாடுகளின் பொருளாதாரம் என அனைத்து தரப்புக்கும் கவலை கொள்ளும் செய்தியே. இனி உணவுப் பொருள் விலை ஏற்றம், உற்பத்தி பொருள் விலை உயர்வு, பணவீக்கம் இதனால் மீண்டும், மீண்டும் வங்கி வட்டி உயர்வு என துயரங்கள் தொடர்கதையாகும் என்பதை மறுப்பதற்கில்லை.

– ரா.தங்கபாண்டியன், நியூஸ்7 தமிழ்

source https://news7tamil.live/opec-countries-to-reduce-crude-oil-production-risk-of-rising-petrol-and-diesel-prices.html