4 4 2023
புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவல் கடந்த ஓர் ஆண்டாக அதிகம் இல்லை என்றாலும் மாவட்ட நல்வாழ்வுத்துறை சார்பில் தொற்று பரிசோதனை செய்து தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் காரைக்கால் பஜன் கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான சிகிச்சை மாவட்ட நல்வாழ்வுத்துறை சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காரைக்கால் வேட்டைக்காரன் வீதி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் நேற்று இரவு உயிரிழந்தார். இதனால் காரைக்காலில் மீண்டும் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் வசித்து வந்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும், பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். குறிப்பாக திரையரங்கம், வணிக வளாகங்கள், மருத்துவமனை மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்”என்று கூறப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
source https://tamil.indianexpress.com/india/puducherry-karaikal-woman-with-co-morbidities-dies-of-covid-19-627784/