வியாழன், 13 ஏப்ரல், 2023

ரிசர்வ் வங்கியின் வார்த்தை ஜாலங்களும், யதார்த்தமும்

 RBI

மார்ச் 2023க்கான ரிசர்வ் வங்கியின் புல்லட்டினில் பொருளாதார நிலை குறித்த வழக்கமான கட்டுரை உள்ளது – ப.சிதம்பரம் (பிரதிநிதித்துவ படம்)

ப.சிதம்பரம்  P Chidambaram

பொருளாதாரம் சம்மந்தமான எந்த முடிவெடுப்பது என்றாலும் ஒரு காலத்தில், இந்திய ரிசர்வ் வங்கியே அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. இது சாதாரண மக்களுக்கு அணுக முடியாத, ஆனால் சுதந்திரமான மற்றும் அறிவார்ந்த நிறுவனமாக கருதப்பட்டது. ரிசர்வ் வங்கி  பல தோல்விகளை சந்தித்தாலும் அதன் நற்பெயர் கறைபடாமல் இருந்தது.

பங்குத் தரகர்களும் வங்கி அதிகாரிகளும்  ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை (1992) கொள்ளையடித்த நிதி ஊழலைக் கண்டுபிடிக்க இயலாமையை ஒரு தோல்வியாக சொல்லலாம். பணமதிப்பிழப்பு (2016) என்ற பொறுப்பற்ற சாகசத்தை அரசாங்கம் மேற்கொண்டபோது, அரசாங்கத்துடன் அது ஒத்துழைத்ததே சமீபத்திய தோல்வியாகும். வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில் ரிசர்வ் வங்கியும் பல சமயங்களில் தவறாகக் கூறப்பட்டது, ஆனால் அது உலக வங்கிகள் பொதுவாக செய்யும் தவறுகள் தான்.

இதையும் படியுங்கள்: சட்டம் தடுமாறலாம், முடிவில் நீதியே வெல்லும்

இருந்தாலும் ரிசர்வ் வங்கி ஒரு அறிவுப் பொக்கிஷம் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக, பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கை துறை மற்றும் புள்ளியியல் பகுப்பாய்வு மற்றும் கணினி சேவைகள் துறை ஆகிய புள்ளி விவரங்கள் மிகவும் நம்பகமான களஞ்சியங்களாகும். இந்த துறைகளில் முதல்தர இருபாலினத்தினரும் பணியில் உள்ளனர். அவர்கள் சிறந்த பகுப்பாய்வு மற்றும் கொள்கை ஆலோசனைகளை வழங்க முடியும். ரிசர்வ் வங்கியின் மாதாந்திர புல்லட்டின், வங்கியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், அறிஞர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் பரவலாக வாசிக்கப்பட்டு நம்பப்படுகிறது. அறிவார்ந்த சோம்பேறித்தனம் அல்லது வெளிப்புற நிர்பந்தங்களால் ரிசர்வ் வங்கி தனது தனித்தன்மையை இழக்கும் என்றால் அது மேலும் பரிதாப நிலைக்கு தள்ளப்படும். 

மார்ச் 2023 கான ரிசர்வ் வங்கியின் புல்லட்டினில் பொருளாதார நிலை குறித்த வழக்கமான கட்டுரை  ஓன்று வெளியிடப்பட்டுள்ளது  இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் இதை எழுதியவர்களின் கருத்துகள் தானே தவிர இந்திய ரிசர்வ் வங்கியின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவ படுத்தவில்லை என்ற வழக்கமான எச்சரிக்கையை கொண்டுள்ளது. இந்த கட்டுரையை தயாரித்தவர்கள் பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கை துறையைச் சேர்ந்தவர்கள். தற்போது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருக்கும் திரு மைக்கேல் பத்ரா தான் இதன் தலைவர் என்றாலும் இந்த பொறுப்பு துறப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

சொல்லாட்சி

பொருளாதாரம் பற்றிய நியாயமான மற்றும் நிதானமான மதிப்பீடாக இருந்திருக்க வேண்டிய கட்டுரை, பொருளாதாரத்தின் நிலையைப் பற்றி மிகவும் அசாதாரணமான கூறுகளை சேர்த்திருப்பது  என்னை கவலையடையச் செய்தது. அவற்றில் சில விஷயங்களை பார்க்கலாம்.

உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு தொடர்ந்து உயர்ந்து வருவது இந்த விரிவாக்கத்தின் அடிப்படை வலிமையாக தெரிகிறது.

தொழிலாளர் சந்தையின் வலிமை வியப்புக்குரியதாக இருக்கிறது. இது ஒரு கூட்டு விளைவு என்றாலும் அது உண்மையில் கலவை மாற்றங்களை பிரதிபலிக்கிறது: ஓய்வு, உணவகத்தொழில், சில்லறை விற்பனை மற்றும் சுகாதாரம் ஆகிய பணிகளுக்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவதால் தொழில்நுட்பத் துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வேலையிழப்பும் தொடர்கிறது. ஆனால் இது புதிய வேலை வாய்ப்பு மூலம் சரி செய்யப் படுகிறது.  

கோவிட் பாதிப்பில் இருந்து இந்தியா வேகமாக விடுபட்டு வருகிறது. அதற்காக இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடக் கூடாது. இதற்கு முக்கிய காரணம் இவை அதற்கு முந்தைய ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டவை.

மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட ரூ.35,000 கோடி வரிச் சலுகையில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தை வரி செலுத்துவோர் நுகர்வுக்கு பயன்படுத்தப்பட்டாலோ, அது அப்படியே தனிநபர் நுகர்வில் சேர்ந்தாலோ அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

அரசின் பயனுள்ள மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட 3.2 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு நிலையான மூலதன செலவில் சேர்ந்து கொண்டாலோ அல்லது மொத்த நிரந்தர நிதி முதலீடாக ஆனாலோ நிலைமை என்ன ஆகும்?  

உலகப் பொருளாதாரத்தை போல இந்திய பொருளாதாரமும் சரிந்தது விடாது. குறையாது – 2022-23 ல் எட்டப்பட்ட விரிவாக்க வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.

தைரியமான வார்த்தைகள் 

இந்திய மத்திய வங்கியின் மாதாந்திர அறிக்கை உண்மையிலேயே தைரியமான வார்த்தைகள். நாம் கேட்பது, பார்ப்பது, படிப்பது மற்றும் அனுபவிப்பது ஆகியவற்றின் வெளிச்சத்தில் அறிக்கைகள். இதை விரிவாக ஆராயலாம். ஆனால் இவை மத்திய வங்கியின் அறிக்கைகளுக்கு மாறான நிலையை கொண்டுள்ளன.

பண வீக்க விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அது தனி நபர் நுகர்வை குறைத்து விட்டது.

தொழில்நுட்ப நிறுவனங்களால் குறைக்கப்பட்ட வேலைகள் சில்லறை வணிக தொழில்களில் கிடைக்கும் வேலைகள் போல் இல்லை. இவற்றுக்கிடையே ஊதிய முரண்பாடுகள் உள்ளன. 

ஒவ்வொரு காலாண்டு மற்றும் தொடர் காலாண்டுகள் குறைந்த வளர்ச்சி விகிதங்களையே பதிவு செய்துள்ளன (கட்டுரையின் அறிக்கை 12-ன் படி).  

அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி சலுகையை வரி செலுத்துவோர் அப்படியே நுகராமல் முழு பணத்தையும் வீட்டு கடனுக்கு திருப்பி கொடுத்து விட்டால் தனி நபர் நுகர்வு எப்படி உயரும்? 

அரசு மூலதன செலவுக்காக ஒதுக்கி இருக்கும் கூடுதல் தொகையை அரசின் கடுமையான சட்ட திட்டங்களால் மாநில அரசுகளால் செலவழிக்க முடியாத நிலை ஏற்பட்டால் பொருளாதார வளர்ச்சி எப்படி ஏற்படும்? கடந்த நிதியாண்டில் அப்படித்தான் நடந்தது. 

இந்திய பொருளாதார வளர்ச்சி குறையவே குறையாது என்ற தீர்க்கமான வாக்கு, இந்தியாவுக்கும் உலகுக்கும் தொடர்பில்லாமல் பிரித்து விட்டது போலவே எதிரொலிக்கிறது.

நிதர்சனம் 

நான் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து பேசி வருகிறேன். அண்மையில் எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், முடி திருத்துபவர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மேயர்கள், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள், கட்சித் தொண்டர்கள், நடுத்தர நிறுவன உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், தலைமை ஆசிரியர்கள், என்.ஜி.ஓக்களின் தலைவர்கள்  ஹோட்டல் அதிபர்கள்  மற்றும் இளம் மாணவர்கள் என பலரையும் சந்தித்தபோது அவர்களில் ஒருவர் கூட பொருளாதாரத்தில் திருப்தியை வெளிப்படுத்தவில்லை. அவர்களின் முக்கிய கவலைகள் பணவீக்கம், வேலையின்மை, பணிநீக்கங்கள் மற்றும் பொருட்களுக்கான நுகர்வுகள் குறைந்து விட்டதாகவே உள்ளது.

பொது மக்களுக்கான பொதுவான துன்பியல் நிகழ்வுகளை விட்டு விட்டு எனக்கு கிடைத்த முடிவு இது தான். தனிநபர் நுகர்வு குறைந்து கொண்டே வருகிறது. தனிநபர் நுகர்வு இன்னும் குறையும் என்றே நான் நம்புகிறேன். அரசின் மூலதனச் செலவுகள் அதிகரித்திருக்கலாம் என்றாலும், அரசாங்கத்தின் இறுதி நுகர்வு குறைந்துள்ளது. 

ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஒரு முக்கிய தொழில் நகரத்தில் 21 அறைகள் கொண்ட ஹோட்டலை நடத்துகிறார். இதில் நிரம்பும் அறைகள் பாதிக்கும் குறைவாகவே உள்ளன. மீத அறைகள் பூட்டியே கிடக்கின்றன. 

இன்னொருவர் ஆடை உற்பத்தியாளர்கள். ஏற்றுமதியாளர்களுக்கு பாதியளவு முடிக்கப்பட்ட தயாரிப்புகளை (நிறுவன ஆர்டர்களுக்கு எதிராக) வழங்குகிறார். இவரிடம் 60 பேர் வேலை செய்தாலும் முழு அளவுக்கு ஆர்டர்கள் இல்லாததால் மாதத்திற்கு சில நாட்கள் உற்பத்தியை நிறுத்தி வைக்கும் நிலையில் தான் இவர் இருக்கிறார். சர்வதேச பிராண்ட் உரிமையாளர்களுக்கு ஆடைகளை தயாரித்து சப்ளை செய்யும் மிகவும் வெற்றிகரமான வணிகக் குழுவின் கதையையும் அவர் விவரித்தார்: வாரத்தில் 7 நாட்கள் இயங்கும் அவர்களின் தொழிற்சாலைகள் இப்போது வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே  இயங்குகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகாமல் இருக்கும் சரக்குகளின் மதிப்பே பல கோடிகளுக்கு அதிகமாக இருக்கிறது. அதிக அளவில் தள்ளுபடி சலுகைகளை அறிவித்ததும் கூட வியாபாரம் முன்னேற்றமடைய வில்லை. அடுத்த ஆண்டு வரை பெரிய ஏற்றுமதி ஆர்டர்கள் எதுவும் கிடைக்காது என்று தொழில் வள நாடான ஜெர்மனியே தெளிவுபடுத்தியுள்ளது. 

சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டும் குறைந்து விட்டன. கடனுக்கு வட்டி அதிகமாக உள்ளது. இது மேலும் உயரலாம் என்று சொல்லப்படுகிறது. நகர்ப்புறங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அகில இந்திய வேலையின்மை விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது.

நீங்கள் எதை நம்ப விரும்புகிறீர்கள்? புள்ளிவிவரங்களையும் வார்த்தை ஜாலங்களையும் கலந்து தயாரிக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கையையா? அல்லது கண்ணால் கண்ட, காதால் கேட்ட மற்றும் உள்ளுணர்வால் உணரப் பட்ட உண்மை நிலவரத்தையா? 

தமிழில் : த. வளவன் 

source https://tamil.indianexpress.com/opinion/rbi-the-rhetoric-and-the-reality-636315/