சனி, 15 ஏப்ரல், 2023

ராகுல் காந்தி பதவி பறிப்பு; தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் – ஏராளமானோர் கைது!

 

ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தியதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து தடுப்புகளை தாண்டு ரயில் நிலையத்திற்குள் சென்ற காங்கிரஸ் கட்சியினர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ரயிலை மறிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்ததால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் ரயில் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

சென்னை குரோம்பேட்டையில் மின்சார ரயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரூபி மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


source https://news7tamil.live/rahul-gandhi-stripped-of-office-congress-party-protests-in-tamil-nadu-many-arrested.html