சனி, 20 மே, 2023

விழுப்புரத்தில் கோவிலுக்குள் அனுமதி கோரி பட்டியலின மக்கள் போராட்டம்: போலீஸ் குவிப்பு

 Protest of Scheduled Caste people demanding permission to enter the temple in Villupuram

விழுப்புரத்தில் கோவிலுக்குள் அனுமதி கோரி பட்டியலின மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்குள் பல ஆண்டுகளாக பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மேலும் கோவிலுக்குள் சென்றால் அடித்து உதைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பட்டியலின மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தை தொடர்ந்து, வளவனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் பட்டியலின மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக கூறிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராகவும் மக்கள் கோஷமிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கோவிலின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், போராட்டத்தின் நடுவே 3 பேர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைக்க முயன்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பட்டியலின மக்கள் கோவில் பிரவேசம் வேண்டி போராட்டம் நடத்திவருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

19 5 23



source https://tamil.indianexpress.com/tamilnadu/protest-of-scheduled-caste-people-demanding-permission-to-enter-the-temple-in-villupuram-673415/