கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற ஆடைகள் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கோடை வெயில் காலத்தில் அணிய வேண்டிய உடை எது ? அணியக் கூடாத உடை எது என்பதை இந்த செய்தி தொகுப்பின் மூலம் பார்க்கலாம்…
ஆடைகள் என்பது நம் அழகுக்கு மட்டுமல்ல நம் உடலுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். குளிர் காலங்களில் அதிலிருந்து பாதுகாக்க கடினமான உடைகளை அணிவதைபோல வெயில் காலத்திலும் அதற்கேற்றார் போல உடையை அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் நம் உடலுக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாத ஆடையை தேர்வு செய்வது நம் ஆரோக்கியத்திற்கும் வழிவகை செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
கறுப்பு நிற உடை என்பது வெப்பத்தை உள்வாங்கி கொள்ளும் சக்தி கொண்டதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதனை தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் வெள்ளை போன்ற இளம் நிறங்களில் ஆடைகளை அணிவது வெப்பத்திலிருந்து பாதுகாக்க ஓரளவிற்கு உதவும் என்பது தோல் நிபுணர்களின் பிரதான பரிந்துரையாக உள்ளது.
அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நாட்களில், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில், ஆடைகளின் வகை மற்றும் அவற்றின் வண்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. வெள்ளை நிறம் கொண்ட ஆடைகள், பருத்தி ஆடைகள் அணிவதால் வெயிலின் தாக்கம் உடலுக்கு செல்வதை தடுப்பதோடு, தேவையான அளவு குளிர்ச்சியையும் நம்மால் உணர முடியும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
கோடை காலங்களில் பெண்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை உடுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், இது போன்ற அடர்த்தியான உடைகளால் உடலில் உருவாகும் வியர்வை வெளியேறாது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவர்களின் பரிந்துரையின் படி ஆடைகளை அணிந்தால் சருமப் பிரச்னைகளிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்.
source https://news7tamil.live/what-is-the-dress-to-wear-to-escape-from-the-scorching-summer-what-is-the-dress-not-to-wear.html