சனி, 3 ஜூன், 2023

இது முதல்முறை அல்ல… – இதுவரை 5 முறை விபத்தை சந்தித்துள்ள கோரமண்டல் எக்ஸ்பிரஸ்!!

 

கோரமண்டல் விரைவு ரயில் இதுவரை சந்தித்துள்ள 5 பெரிய விபத்துகள் குறித்து விரிவாக பார்க்கலாம்….

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டது. அதே நேரத்தில் மற்றோரு தடத்தில் வந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம்புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது.

இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளாவது இது முதல்முறை அல்ல. இந்த விபத்துக்கு முன்னதாக, 2002, 2009, 2012-ல் இருமுறை, 2015 என 5 முறை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தை சந்தித்துள்ளது.

15 மார்ச் 2002 – நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோவூர் பகுதியில், படுகுபாடு சாலை மேம்பாலத்தில் ஹவுரா-சென்னை இடையே இயங்கும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 7 பெட்டிகள் தடம் புரண்டதில் 100 பயணிகள் காயமடைந்தனர்.

13 பிப்ரவரி 2009 – ஒடிசாவில் புவனேஸ்வரில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஜாஜ்பூர் கியோஞ்சர் சாலை அருகே, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

டிசம்பர் 30, 2012 – ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதில் 2 குட்டி யானைகள் உட்பட 6 யானைகள் உயிரிழந்தன.

14 ஜனவரி 2012  லிங்கராஜ் ரயில் நிலையம் அருகே சென்னை – ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஜெனரல் கம்பார்ட்மென்ட்-ல் தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவுவதற்கு முன்பே அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட உடனே தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு 20 நிமிடங்களில் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

18 ஏப்ரல் 2015 – நிடதவோலு ஜங்ஷன் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்தது. இதில் 2 பெட்டிகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.


source https://news7tamil.live/this-is-not-the-first-time-coromandel-express-has-met-with-an-accident-5-times-so-far.html