வெள்ளி, 16 ஜூன், 2023

இ-சேவை மையம் தொடங்குவது எப்படி?

 இ-சேவை மையம் தொடங்குவது எப்படி?

தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் சேவைகள் பெரும்பாலும் இணையதளம் மூலமாகவே வழங்கப்படுகிறது. அதில் வருவாய்துறை சான்றிதழ்கள் உட்பட சில சேவைகள் மக்கள் நேரடியாக தங்களுக்கான உள்நுழைவு ஐடியை குடிமக்கள் போர்டலில் பதிவு செய்துகொண்டு பெற முடியும். மற்ற சேவைகள் அனைத்தும் இ-சேவை மையங்கள் மூலமாகவே வழங்கப்படுகிறது.
இ-சேவை மையங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
இ-சேவை மையங்கள் பொதுவாக தனியார் இ-சேவை மையம், மக்கள் கணினி மையம், கணினி மையம், இ-சேவை மையம், பொது இ-சேவை மையம், அரசு இ-சேவை மையம், அரசு பொது இ-சேவை மையம் என வெவ்வேறு பெயர்களில் மக்களால் அழைக்கப்படும். ஆனால் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மூலம் வழங்கக்கூடிய இ-சேவை ஐடிகளை வைத்துள்ள மையங்களே அரசு பொது இ-சேவை மையம் என அழைக்கப்படும்.
இ-சேவை மையத்தை தொடங்க என்னென்ன தகுதிகள் தேவை?
இ-சேவை மையத்தை நடத்த சிறிது கணினி அறிவும், தமிழ் ஆங்கிலம் டைப்பிங் தெரிந்தாலே போதுமானது. போதிய இட வசதியை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஆர்வமும் திறமையும் இருந்தால் சிறப்பாக செயல்பட்டு நல்ல வருமானம் ஈட்டலாம்.
இ-சேவை மையத்தை தொடங்கும் வழிமுறைகள் யாவை?
இ-சேவை மையங்களை தொடங்க கீழ்கண்ட படிகள் உள்ளன. முழுமையாக படிக்கவும்.
1. முதலில் இ-சேவை மையத்தை ஆரம்பிக்க தேவையான கீழ்கண்ட உபகரணங்களை வாங்கி கொள்ளவும்.
கணினி
ஸ்கேனர்
பிரிண்டர்
பயோமிட்ரிக் கருவி
வெப் கேமரா
இணைய வசதி
கண்காணிப்பு கேமரா
2. சிட்டா/பட்டா, வில்லங்க சான்று போன்ற பல சேவைகள் வழங்க எந்தவொரு ஐடியையும் பெற அவசியம் இல்லை. அவற்றை முதலில் தங்கள் மையத்தில் வழங்கலாம்.
3. தங்கள் மையத்தில் கூடுதல் சேவைகளை வழங்க அந்தந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து ஐடியை விண்ணப்பித்து பெற வேண்டும். உதாரணமாக டிஜிட்டல் சேவா ஐடி, இ-சேவை ஐடி, இ-டிஸ்டிரிக்ட் ஐடி, etc. பொதுவாக மத்திய அரசால் வழ‌ங்க‌ப்படு‌ம் சேவைகள் டிஜிட்டல் சேவா ஐடி மூலமும் மாநில அரசால் வழ‌ங்க‌ப்படு‌ம் சேவைகள் இ-சேவை ஐடி மூலமும் வழங்கப்படும்.
4. தனியர் இரண்டு வழிகளில் மின் ஆளுமை முகமையின் இ-சேவை ஐடியை பெற முடியும்.
5. ஒன்று, கேபில் டீவி நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மின் ஆளுமை முகமையின் இ-சேவை ஐடியை நேரடியாக பெறமுடியும். இந்த ஐடியை பெற மாவட்ட கேபில் டீவி நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
6. இரண்டு, மத்திய அரசின் கீழ் இயங்கும் CSC e-Governance அல்லது CSCSPV நிறுவனத்தின் மூலம் கிராம தொழில் முனைவோர் டிஜிட்டல் சேவா ஐடியை பதிவு செய்து பெறமுடியும். சிறப்பாக செயல்படும் கிராம தொழில் முனைவோர்களுக்கு இந்த நிறுவனத்தின் மூலமாகவே மின் ஆளுமை முகமையின் இ--சேவை ஐடி பெற்று கிராம தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும். இது தொடர்பான தகவல்களுக்கு இந்த நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம் (அவர்களின் தொடர்பு எண்கள் அந்த இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும்) அல்லது டிஜிட்டல் சேவா ஐடியை விண்ணப்பித்த பிறகு அவர்களே கள ஆய்வு மேற்கொள்ள மையத்திற்கு வருவார்கள் அப்போது தொடர்பு கொள்ளலாம்.
TNeGA இ-சேவை ஐடி பெற எவ்வளவு நாள் ஆகும்?
மேலே குறிப்பிடப்பட்ட ஐடிகளை பெற குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும். ஆகவே பொறுமை மிக அவசியம். சேவை மைய முகவர்களுக்கேற்ப காலம் மாறுபடும். CSCSPV ஐடி பெற, முதலில் டிஜிட்டல் சேவா ஐடியை பெற்று சிறப்பாக செயல்பட வேண்டும். அதன் பின்னரே பரிந்துரைக்கப்படுவீர். கேபிள் டிவி ஐடியை பெற, விண்ணப்பத்துடன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட மையங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு தகுதி வாய்ந்த மையங்களுக்கு ஐடி வழங்கப்படும்.
TNeGA இ-சேவை ஐடி பெற கட்டணம் செலுத்த வேண்டுமா?
இல்லை. TNeGA இ-சேவை ஐடி பெற கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஐடியை இலவசமாகவே பெறலாம். கேபிள் டிவி ஐடியை பெறுவதற்கு மட்டும், குறிப்பிட்ட வைப்பு தொகை செலுத்த வேண்டும். அந்த வைப்பு தொகையானது ஒப்பந்தம் முடிந்த பின்பு திரும்ப வழங்கப்படும்.
அனைத்து இ-சேவைகளையும் வழங்க TNeGA இ-சேவை ஐடி கட்டாயமா?
இல்லை. மின்கட்டணம் செலுத்துதல், பத்திர பதிவு சேவைகள், டிக்கெட் புக்கிங் etc... போன்ற சேவைகளை வழங்க அந்தந்த இணையதளத்திலேயே ஐடியை பதிவு செய்து பெற்று கொள்ளலாம். சிட்டா/பட்டா, வில்லங்க சான்று போன்ற பல சேவைகள் வழங்க எந்தவொரு ஐடியையும் பெற அவசியம் இல்லை. டிஜிட்டல் சேவா ஐடி இருந்தால் மத்திய அரசின் பல திட்டங்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்ட சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க முடியும்.
டிஜிட்டல் சேவா ஐடி மூலம் என்னென்ன சேவைகள் வழங்க முடியும்?
பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்துதல் (PMFGY)
ஓய்வூதியம் விண்ணப்பித்தல்(PMSYM)
இலவச டிஜிட்டல் கல்வி வழங்குதல்(PMGDISHA)
மின்கட்டணம் செலுத்துதல்
டிக்கெட் புக்கிங் (Flight/Train/Bus/Darshan)
பான் கார்டு(PAN Card) விண்ணப்பித்தல்
வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல்,
விவரங்களை திருத்தம் செய்தல்
ஆதார் சேவைகள்
பாஸ்போர்ட் (Passport) விண்ணப்பித்தல்
மொபைல்/DTH ரிச்சார்ஜ்
LED பல்ப் வழங்குதல்
ஓய்வூதியதாரர்களுக்கு உயிர் சான்றிதழ் வழங்குதல்
பாஸ்ட் டேக்(FASTTAG)
பைக்/கார் வாகனங்களுக்கு காப்பீடு வழங்குதல்
மருத்துவ சேவைகள்
ஆயுள் காப்பீடு பணம் செலுத்துதல்
திறன் வளர்ப்பு பயிற்சி அளித்தல
தொலைதூர கல்வி (Tele Education) வழங்குதல்
தொலைதூர மருத்துவம் (Tele Medicine) வழங்குதல்
DigiPay மூலம் பண பரிமாற்றம்
வங்கி சேவைகள் (Bank Correspondence)
மேலும் பல சேவைகள்
TNeGA இ-சேவை ஐடி மூலம் என்னென்ன சேவைகள் வழங்க முடியும்?
வருவாய்த்துறை சான்றிதழ்கள்
திருமண உதவிதொகை
குழந்தை பாதுகாப்பு திட்டம்
இணையவழி பட்டா மாற்றம்
தற்காலிக பட்டாசு உரிமம்
இ-அடங்கல்
மின் கட்டணம் செலுத்துதல்
பட்டா/சிட்டா/புலப்படம்
குடும்ப அட்டை திருத்தங்கள்
காவல்துறை சேவைகள் (CSR/FIR Status, Lost Document Report etc.)
போக்குவரத்துத்துறை சேவைகள் (LLR Application)
பத்திரப்பதிவு துறை சேவைகள் (Online appointment for Marriage/ Document registration)
தீ மற்றும் மீட்பு துறை சேவைகள்
பிறப்பு/இறப்பு சான்றிதழ் அச்சிடுதல்
மாநகராட்சி/நகராட்சி குடிநீர்/சொத்து/தொழில் வரி செலுத்துதல்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சேவைகள் (Registration and Renewal)
சுகாதாரத்துறை சேவைகள் (மருந்து கடை உரிமம் விண்ணப்பித்தல்)
மீன்வளத்துறை சேவைகள் (Relief Assistance during Fishing Ban Period)
மேலும் பல சேவைகள்
TNeGA இ-சேவை ஐடிக்கு விண்ணப்பிக்கும் பொழுது நினைவில் கொள்ளவேண்டியவை யாவை?
மையத்தின் முகவரி, மையத்தை இயக்குபவர் (CSC Operator) விவரம் மற்றும் குறிப்பாக தங்கள் மையம் அமைந்துள்ள இடம் கிராம ஊராட்சியில் உள்ளதா அல்லது பேரூராட்சி உள்ளதா அல்லது நகராட்சி உள்ளதா என்பதை தெளிவாக குறிப்பிட்ட வேண்டும். ஏனெனில் பின்பு அந்த விவரங்களை மாற்ற இயலாது.
TNeGA இ-சேவை ஐடி பெற்ற பின்பு என்ன செய்ய வேண்டும்?
TNeGA இ-சேவை ஐடி பெற்ற பின்பு, பயோமெட்ரிக் உள்நுழைவு செய்ய ஏதுவாக தங்கள் ஐடியுடன் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்படும். பின்பு இ-சேவைகளை மேற்கொள்ள தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். தங்கள் மையத்தில் அரசு இ-சேவை மையம் என பெயர் பலகை, சேவைகள் மற்றும் அரசு நிர்ணயித்த சேவை கட்டணங்கள் மற்றும் புகார் எண்கள் அடங்கிய பலகை வைக்கப்பட வேண்டும். அதன்பின் தங்கள் மையத்தில் இ-சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கலாம்.
தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , ஏரல் கிளை - மாணவரணி , தூத்துக்குடி மாவட்டம்.