காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இரண்டாவது ஒற்றுமை நடைப்பயணம், குஜராத் முதல் மேகாலயா வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களுள் ஒருவர் ராகுல்காந்தி, இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ பாதயாத்திரையை தொடங்கினார். பின்னர் கேரளா, கர்நாடக, ஆந்திர உள்ளிட்ட 14 மாநிலங்கள் வழியாக பயணிக்க துவங்கிய இவர், அங்கு உள்ள தலைவர்களையும் பொதுமக்களையும் சந்தித்து தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்.
கிட்டத்தட்ட கன்னியாகுமரியில் இருந்து 150 நாட்கள் 4,080 கி.மீ தொலைவு நடந்தே காஷ்மீர் வரை சென்றடைந்த ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகரில் கடந்த ஜனவரி 30-ம் தேதி இந்த பாதயாத்திரையை நிறைவு செய்தார். அதனை தொடர்ந்து தற்போது நாட்டின் குறுக்குவெட்டு மாநிலங்களில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் நானா படோல் செய்தியாளர்களை இன்று (ஆக. 8) சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார். ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தின் இரண்டாவது அத்தியாயம் குஜராத்திலிருந்து தொடங்கவுள்ளது. பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் முன்னெடுக்கும் இந்த நடைப்பயணம் மேகாலயாவில் நிறைவு பெறும் எனக் குறிப்பிட்டார்.
source https://news7tamil.live/rahul-gandhis-2nd-unity-walk-gujarat-meghalaya.html