புதன், 9 ஆகஸ்ட், 2023

6 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல்.. தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்…

 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கேரளா, ஜார்க்கண்ட், திரிபுரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஜார்கண்டின் தும்ரி, கேரளாவில் அண்மையில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் தொகுதியான புதுப்பள்ளி, திரிபுராவின் போக்ஷாநகர் மற்றும் தன்புர், மேற்குவங்கத்தின் துப்குரி(தனித்தொகுதி), உத்தரப்பிரதேசத்தின் கோசி, உத்தரகண்டின் பகேஷ்வர் ஆகிய 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதிகளில் செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 17ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். ஆகஸ்ட் 18ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

செப்டம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.


source https://news7tamil.live/the-election-commission-of-india-has-announced-the-dates-for-assembly-by-elections-in-6-states.html