புதன், 16 ஆகஸ்ட், 2023

திருச்சியில் விவசாயிகள் கருப்பு முக்காடு போட்டு போராட்டம்; போலீஸார் அதிர்ச்சி

 Trichy Farmer protest

சுதந்திரத் தினத்தன்று திருச்சியில் விவசாயிகள் கருப்பு முக்காடு அணிந்து போராட்டம்; போலீஸார் எச்சரிக்கை

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த சில நாட்களாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக நீதிமன்ற அனுமதியுடன் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

   இந்தப்போராட்டத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை தர வேண்டும், விவசாய வாங்கிய வங்கி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் வீடுகளில் வங்கி பணியாளர்கள் புகுந்து அடாவடித்தனமாக பொருட்களை பறிமுதல் செய்வதை அரசு கட்டுப்படுத்த வேண்டும், கர்நாடக அரசு காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும், மேகதாது அணையை கட்டுவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்களாக பல்வேறு நூதன முறையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் 19 ஆம் நாளான இன்று நாடே சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடிவரும் வேளையில் திருச்சியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தியதோடு அல்லாமல், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில், தலையில் கருப்பு துணிகளைக்கொண்டு முக்காடு போட்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் குறித்து கேள்விப்பட்ட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கொந்தளித்தனர். சுதந்திர தினத்தன்று விவசாயிகள் கருப்பு துணிகொண்டு முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்த யார் அனுமதி கொடுத்தது என சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் எழுப்பிய கேள்விகள் வைரலானது.

  இதனை அறிந்த ஸ்ரீரங்கம் சரக காவல்துறை ஆணையர் நிவேதாலட்சுமி மற்றும் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சிவராமன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் சென்று கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர்.

  இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தாங்கள் முக்காடு போட்டுக் கொண்டிருந்த கருப்பு துணிகளை காவல்துறையினரும் ஒப்படைத்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.

  நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், விவசாயிகள் கருப்பு முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-farmers-protest-wearing-black-cloth-on-independence-day-739164/