மத பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு நடைபெறும் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்திற்கு பிரதமர் வருகை தராமல் மெளனம் காத்து வருகிறார். அவையில் கலவரம் பற்றி விவாதிக்ககாமல் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக வன சட்டம் மாற்றியமைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருப்பது தவறானது. எந்த விதமான அனுமதியும் இன்றி கட்டுமான பணிகளை வனப் பகுதிகளில் மேற்கொள்ள மத்திய அரசு துணை போவது தவறானதாக அமையும். மணிப்பூர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்படுத்தியிருக்கிறது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை யொட்டி, கருணை அடிப்படையில் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள். கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக எந்த முஸ்லிம் சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படவில்லை. நாங்கள் குறிப்பிடும் 37 ஆயிரம் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
சிறுபான்மையினர் குறித்து சீமானின் கருத்து அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. 18 சதவிகிதம் சிறுபான்மையினர் வாக்களித்து தான் திமுகவும், காங்கிரஸும் வெற்றி பெற்றார்கள் என்பது உண்மைதான். மீதம் இருக்கக்கூடிய 82 சதவிகிதம் மக்களை நோக்கி சீமான் ஏன் இந்த கேள்வியை கேட்கவில்லை. இப்படி ஒரு கருத்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. சிறுபான்மையினர் குறித்து சீமான் பேசிய கருத்துக்களை திரும்ப பெற வேண்டும். எரிகிற புண்ணில் எண்ணெய் ஊற்றுவது போன்று இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பாஜகவின் பருப்பு தமிழகத்தில் வேகாது. இந்த பயணத்தின் மூலம் ஒரு தொகுதிகளில் கூட அவர்கள் வெற்றி பெற முடியாது. கலவரம், சட்டம், ஒழுங்கு அபாயத்திலிருந்து தமிழகத்தை காப்பாற்றிட வேண்டும். தமிழகம் தொடர்ந்து அமைதி மாநிலமாக தொடர அரசு வழிவகை செய்ய வேண்டும். ஆளும் அரசை பேசுவது அவர் உரிமை. ஆனால் மக்களை பிளவு படுத்தும் உள்நோக்கத்தோடு பாஜக செயல்படுகிறது. வேலைவாய்ப்பு கேட்டோம் பொது சிவில் சட்டத்தை யார் கேட்டது. அதனை வேண்டுமென்றே மத்திய அரசு தணிக்க முயற்சி செய்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/annamalai-padayatra-must-be-stopped-immediately-state-president-of-stbi-party-mubarak.html