வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

மன்னிப்பு கோர முடியாது” – அவதூறு வழக்கில் ராகுல் காந்தி சார்பில் மனு தாக்கல்!

 

அவதூறு வழக்கில் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் அவர் எப்போதோ செய்திருப்பார் என ராகுல் காந்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம் அளித்த அந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது எனத் தெரிவித்து ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து குஜராத் நீதிமன்றமும் ராகுலின் தண்டனையை தள்ளுபடி செய்ய மறுத்த நிலையில் அவர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ராகுல் காந்தி தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றவியல் நடைமுறை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் செய்யாத குற்றத்திற்காக ஒருவரை மன்னிப்பு கேட்க நிர்பந்திப்பது நீதித்துறை செயல்முறையின் மோசமான துஷ்பிரயோகம். இந்த அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை. தனது பேச்சில் தவறு இல்லை. எனவே மன்னிப்பு கோர முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் முன்னதாகவே செய்திருப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


source https://news7tamil.live/cant-apologize-rahul-gandhi-filed-a-petition-in-the-defamation-case.html