திங்கள், 14 ஆகஸ்ட், 2023

அசைவ உணவு சாப்பிடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் இதில் அரசு தலையிட முடியாது! பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

 

அசைவ உணவு சாப்பிடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் அதில் அரசு தலையிட முடியாது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

திருவண்ணாமலை நகர பகுதியின் மையத்தில் அமைந்துள்ள அய்யங்குளம் குளக்கரை
புனரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றது எனவும், குளக்கரையில் உள்ள படிக்கட்டுகள், கைப்பிடி சுவர்கள், குளத்திற்கு வரும் நீர்வரத்து வழிப்பாதை உள்ளிட்ட அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில்களாவது:

கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்திற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உணவு சாப்பிடுவோரின் தனிப்பட்ட கருத்தில் தானோ அல்லது அரசோ தலையிட முடியாது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பப்படி உணவு வகைகளை
சாப்பிட்டு வருவதாகவும், ஆகையால் இந்த உணவைத்தான் சாப்பிட வேண்டும் இந்த
உணவைத்தான் விற்க வேண்டும் என்று தன்னாலோ தமிழக அரசாலோ தெரிவிக்க முடியாது. மாத மாதம் வரும் பௌர்ணமி தினத்தின் பொழுது கிரிவலப் பாதையில் உள்ள உணவகங்களில் அசைவ உணவு சமைக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்திருக்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர்
எ.வ.வேலு 12 ஆண்டுகள் அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற ஒரு மாணவர் மூன்று மாதம் தனியாரிடம் பயின்று நீட் தேர்வு எழுதினால் எவ்வாறு தேர்ச்சி அடைய முடியும். ஆகையால் தமிழ்நாடு அரசும் தமிழக முதல்வரும் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்திற்காக நீட் தேர்வை ரத்து செய்வதில் தயக்கம் காட்ட மாட்டார்கள். கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்திற்காக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் சுற்றியுள்ள நான்கு மாட வீதியில்
சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை நடந்து சென்று ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சாலை அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

source https://news7tamil.live/eating-non-vegetarian-food-is-ones-personal-choice-and-the-government-cant-do-anything-about-it-public-works-minister-av-velu-interview.html