வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட கணினி, மடிக்கணினி மற்றும் டேப்லெட்டுகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலகட்டத்தில், கணினிகள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் இறக்குமதியின் மதிப்பு 19.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது .
இது கடந்த ஆண்டை காட்டிலும் 6.25% அதிகமாகும். இதனால் உள்நாட்டு மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்கனவே எலக்ட்ரானிக்ஸ் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் போன்ற தயாரிப்புகளை உள்ளடக்கிய IT வன்பொருள் உற்பத்தியில் பெரு நிறுவன முதலீடுகளை ஈர்ப்பதற்காக மத்திய அரசு இன்று புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன் படி, HSN 8741 விதியின் கீழ் வரும் கணினிகள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் சர்வர்கள் ஆகியவற்றின் இறக்குமதி தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சரியான லைசென்ஸ் பெற்று இந்த பொருட்களை இறக்குமதி செய்தால் எந்த சிக்கலும் இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், அவற்றிற்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அனைத்து வரிகளும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, தரப்படுத்தல், மதிப்பீடு செய்தல், பழுதுபார்ப்பு, மறுஏற்றுமதி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நோக்கங்களுக்காக தடை செய்யப்பட்ட பொருட்களில் குறிப்பிட்ட 20 எண்ணிக்கையிலான பொருட்களை மட்டும் இறக்குமதி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பழுது பார்ப்பதற்காக வெளிநாட்டில் வழங்கப்பட்ட குறிப்பிட்ட தடை செய்யப்பட்ட மின்னணு பொருட்களை, மீண்டும் இந்தியா கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இருக்காது எனவும், அவ்வப்போது திருத்தப்பட்ட சாமான்கள் விதிகளின் கீழ், இறக்குமதிக்கு மேற்கூறிய கட்டுப்பாடு பொருந்தாது என்றும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா